பாஜகவுக்கு தாவப்போகும் பல கட்சி தலைவர்கள்: பர பர ரிப்போர்ட்

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த அமோக வெற்றி காஷ்மிர் முதல் கன்யாகுமரி வரை உள்ள கட்சிகளை பீதி கொள்ள செய்துள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், பல கட்சிகளில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களும், சில கட்சிகளில் மூத்த தலைவர்களுமே பாஜகவுக்கு தாவும் மனநிலையில் உள்ளார்களாம்.

ஏற்கனவே மேற்கு வங்கத்தில் பல கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் பாஜகவுக்கு அணி மாறியுள்ள‌ நிலையில், கர்நாடகவிலும் ஆளும் ஜனதா தளம் மற்றும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் பாரதிய ஜனதாவுக்கு தூது விட்டு வருகிறார்களாம். கேரளாவிலும் இதே டிரென்ட் தானாம்.

அதிலும், பிரதமர் நரேந்திர மோடியை கேரள காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஓப்பனாக ஆகா ஒகோ என்று புகழ்ந்து பரபரப்பை கிளப்பியுள்ளார். கேரள மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் அப்துல்லா குட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதி உள்ளார்:

“மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, அவருடைய வழியில் ஆட்சி நடத்தி வருவதால் தான் நரேந்திர மோடியால் பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற முடிந்தது.

மோடியின் தூய்மை இந்தியா திட்டம், இலவச எரிவாயு திட்டம் போன்றவை ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, மோடியின் வளர்ச்சி திட்டங்களால் கிடைத்தது” என்று மோடியை புகழ்ந்துள்ளார்.

இவருடைய இந்த பதிவு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே, அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்பியாக இருந்த போது குஜராத்தில் மோடியின் வளர்ச்சி திட்டங்களை புகழ்ந்ததால் அக்கட்சியில் இருந்து 2009-ம் ஆண்டு வெளியேற்றப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.

நாளை மோடியின் பதவியேற்பு வைபவம் டில்லியில் முடிந்த பிறகு, பல கட்சிகளிலிருந்தும் தலைவர்கள் பாரதிய ஜனதாவில் இணையும் நிகழ்ச்சிகள் நாடு முழுவது நடந்தேறும் எனத் தெரிகிறது.