சீறிய லாரன்ஸ், சிதறிய‌ சீமான்: பின்னணியில் ரஜினி?

நடிகர் ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களால் தான் வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், தன்னை அரசியல்வாதியாக்க வேண்டாம் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டாலும் வெளியிட்டார், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

ராகவா லாரன்ஸுக்கும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலருக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சியினர், ராகவா லாரன்ஸ் செய்து வரும் தொண்டுகள் பற்றி தொடர்ந்து தவறாக விமர்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்.

நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்.

அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்னையும் இல்லையே பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார் என எனது நண்பர்களிடம் கேட்டேன்.

அவர்கள் சொன்னது, “ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்” என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன். அதே சமயம், நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்.

என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசிவிட்டுப் போய்விட்டீர்கள். ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள், என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்.

நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்.எனது தலைவனும், என் நண்பனும் கூட,நான் எந்த உதவி கேட்டாலும் உடனே, செய்து கொடுக்கிறார்கள்…செய்தும் வருகிறார்கள்… அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள். ஆனால் நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்….? எச்சரிக்கை தான்” என்று தெரிவித்திருந்தார்.

சீமானிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “லாரன்ஸ் மீது எனக்கு எப்போதும் வருத்தமில்லை. மதிப்புதான். அவர் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாரு. உதவுறாரு. அவர் சேவை குணம் மீது எனக்கு மதிப்பு இருக்கு. யாராவது ரெண்டுபேர் புரிதலில்லாமல் விமர்சித்து இருக்கலாம். அப்படி இருந்தா அது தப்பு.

அது யாருன்னு கண்டுபுடிச்சு நடவடிக்கை எடுக்கலாம். ஏன்னா, லாரன்ஸ் தம்பிய ஒரு எதிரியா பார்க்க வேண்டிய தேவையே நமக்கு இல்லை. யாராவது ஒருவர் நம்ம பேர்ல போட்டுவிட்டுட்டு வம்பு இழுப்பாங்க. போலியான முகநூல் பக்கங்களை வெச்சுகிட்டு நான் பேட்டி கொடுக்காமலேயே, நா கொடுத்ததால்லாம் போடுவாங்க. அந்தமாதிரி வேலைகள் நடக்க வாய்ப்பிருக்கு. அப்படி செஞ்சிருந்தா அது தவறு. அதுக்கா நான் தம்பி லாரன்ஸ்கிட்ட என் வருத்தத்தை தெரிவிச்சுக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே, லாரன்ஸ் தனது அறிக்கையில் ‘தலைவர்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருப்பதால், இதற்கெல்லாம் பின்னணியில் ரஜினி இருப்பாரோ என்று சிலர் ஐயம் தெரிவிக்கின்றனர். எல்லாம் அந்த அண்ணாமலையாருக்கே வெளிச்சம்.