கவிப்பேரரசு வைரமுத்து வின் நாட்படு தேறல் தமிழிசைக் கொண்டாட்டம்

கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டுத் தொடர் 
ஏப்ரல் 18 முதல்  பகல் 1.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியிலும், மாலை 5.30 மணிக்கு இசையருவியிலும், பகல் 2 மணி முதல் வைரமுத்து யூ டியூப் வலைத்தளத்திலும் ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து 13 வாரங்களுக்கு ஒளிபரப்பாகிறது. 
நாட்படு தேறல் தொடரின் இரண்டாம் பாடலாக ‘இந்த இரவு தீர்வதற்குள்ளே’ என்ற பாடல் நாளை வெளிவருகிறது. இசை : அனில் ஸ்ரீநிவாசன், குரல் : ஆர்.பி.ஷ்ரவண், இயக்கம் : அருள்.எஸ்
பாடல் வரிகள் :
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
ஒருகோடி மொட்டுக்கள்
உடைந்திருக்கும்
ஒன்றிரண்டு விண்மீன்கள்
உதிர்ந்திருக்கும்
எத்தனையோ கருப்பையில்
உயிர்த்திரவம் விழுந்திருக்கும்
எத்தனையோ படுக்கைகளில்
நோய்த்துன்பம் முடிந்திருக்கும்
உன்னைநான் முத்தமிடத்
தடையுண்டோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
*
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
மென்காற்று கண்டங்கள்
கடந்திருக்கும்
வெண்ணிலவு ஒருகீற்று
வளர்ந்திருக்கும்
கண்ணாடிக் கோப்பைகளும்
கன்னிமையும் உடைந்திருக்கும்
முன்னிரவில் பலர்செய்த
பாவங்கள் மறந்திருக்கும்
உயிர் ரெண்டும் இடம்மாறத்
தழுவாயோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்​
சமூக இடைவெளி?
*
இந்த இரவு தீர்வதற்குள்ளே…
அழகான கவிதைவரி
விழுந்திருக்கும்
அரசாங்கச் சதியொன்று
முடிந்திருக்கும்
சிறைவாசக் கைதிக்கு
நாளொன்று குறைந்திருக்கும்
சேயொன்று கருப்பையில்
சிலபொழுது புரண்டிருக்கும்
உறவேதும் நேராமல்
பிரிவாயோ பைங்கிளி?​​
உனக்கும் எனக்கும் ஏன்​
சமூக இடைவெளி?