அரசியலில் குதிக்கும் கஸ்தூரி, அதிரடி முடிவு எடுத்ததன் பின்னணி

ஓப்பனாக பேசுகிறேன் என்னும் பெயரில் எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கும் நடிகை கஸ்தூரி, தற்போது தான் அரசியலில் குதிக்கப் போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இபிகோ 302 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கஸ்தூரி அளித்துள்ள‌ பேட்டியில், “என்னை பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நிறைய கட்சிகள் அழைப்பு விடுத்தன. கட்சி சார்ந்த அரசியலில் எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை.

சமீபகாலங்களில் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அரசியலுக்கு வந்ததாகவோ அல்லது அரசியலில் இருப்பவர்கள் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவோ என் கண்ணுக்கு அகப்படவில்லை.

அரசியலை பொறுத்தவரை நான் ஒரு கத்துக்குட்டி. எனக்கே இந்த தேர்தல் ஏமாற்றத்தை தான் கொடுத்தது. நான் களம் இறங்கி இருக்கலாமோ என்று எண்ண தோன்றியது. எனக்கு பிரபலம், பின்புலம், மக்கள் சேவை அனுபவம் என சில தகுதிகள் இருக்கின்றன. நான் உள்ளே நுழைந்தால் நிறைய நல்லவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு உண்டு,” என்று கூறியுள்ளார்.

தனக்கு வரும் மிரட்டல்களையும், ஆபாச அர்ச்சனைகளையும் சமாளிக்கவே கஸ்தூரி அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதற்கு பல கண்டனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம்.

அதிமுகவினர் முதல் எம்ஜிஆர் ரசிகர்கள் முதல் நடுநிலையினர் வரை அனைவரும் கஸ்தூரியை விமர்சித்து வந்த‌ நிலையில், நடிகை லதாவே கூட அவரை சாடினார். “எம்ஜிஆரையும், என்னையும் தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். மக்கள் திலகம் எம்ஜிஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க.

அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா? கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே? எதுக்கு நானும், எம்ஜிஆர் நடிச்ச படத்தைச் சொல்லணும்.

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம், அது இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா? ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படுத்துற மாதிரி பேசலாமா? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி,” என்றார் லதா.

ஆனால், கஸ்தூரி சளைக்காமல் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அதில், “எம்ஜிஆர் காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை தடவியதில் என்ன தவறு உள்ளது?

அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும், பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை,” என்றார்.