ஜோதிகா நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் துஷார் ஹிர நந்தானி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்ரீகாந்த்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பார்வை திறன் சவாலுள்ள மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் நிதி பார்மர் ஹிராநந்தானி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை விமான நிலையத்தில் உள்ள பிவிஆர் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது ஜோதிகா, இயக்குநர் துஷார் ஹிராநந்தானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை ஜோதிகா பேசுகையில், ” ஸ்ரீகாந்த் திரைப்படம் மிகவும் இன்ஸ்பிரேஷனான ஸ்டோரி. துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நானும் பங்களிப்பு செய்ததற்காக பெருமிதம் கொள்கிறேன்.
என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதை கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசியதும், அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த என்னுடைய பார்வை மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் பொதுவெளியில் அவர்கள் அவர்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதையும் குறித்தும் பல வினாக்களை என்னுள் எழுப்பியது.
இந்தத் திரைப்படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
இந்த திரைப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். ‘ காக்க காக்க”, ‘ராட்சசி’ அதன் பிறகு ‘ஸ்ரீகாந்த்’ எனும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்.
பாலிவுட் திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது. அற்புதமானது. பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை. மலையாள திரையுலகமாக இருந்தாலும்.. தமிழ் திரையுலகமாக இருந்தாலும்.. பாலிவுட் திரையுலகமாக இருந்தாலும்.. திறமையான கலைஞர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறேன். இந்த திரைப்படத்தை டி சிரீஸ் நிறுவனமும் , நிதி ஹிராநந்தனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். துஷார் ஹிராநந்தனி இயக்கியிருக்கிறார். மே பத்தாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் துஷார் ஹிராநந்தானி பேசுகையில், ” ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் அவரை சந்தித்தேன். மூன்று நாட்கள் அவருடன் செலவழித்தேன். நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தோம். அதன் போது அவர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். ” என்றார்.