பாஜகவில் இணைகிறாரா வாசன்? அழகிரி அறிக்கையின் பின்னணி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட‌ அறிக்கை தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை கிளப்பியது. அந்த அறிக்கையில் அவர், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன.

காங்கிரசில் வாழ்க்கையை தொடங்கியவர்கள் பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம். எனவே, கருத்து வேறுபாட்டால் தமாகாவுக்கு சென்ற தொண்டர்கள் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும். அவர்களுக்காக சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்தே உள்ளன,” எனக் கூறியிருந்தார்.

மேலும் அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த முடிவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருக்கிற தொண்டர்கள் எவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.

எந்த இயக்கத்தோடு பல வருடங்களாக இரண்டறக் கலந்து உணர்வுபூர்வமாக பணியாற்றினோமோ, அந்த இயக்கத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருந்தாலும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. பாஜகவில் சேருவது என்பதை உங்களாலே மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை பாஜகவில் சேருவது என தவறான முடிவெடுத்தால் அந்த முடிவை காங்கிரஸ் உணர்வுள்ள இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும். எதை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ, அதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியும். பாஜகவில் இணைவது என்ற முடிவு அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகும்.

எனவே, நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற அனைவரையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில் உங்களை இருகரம் கூப்பி அன்போடு அழைக்கிறேன். ராகுல்காந்தியின் போர்ப்படையில் இணைய உடனடியாக வாருங்கள்,” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த அறிக்கைக்கு தமாகா தலைவர் ஜி கே வாசன் உடனே மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையுடன் செயல்படுகிறது. கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சதி இது. பாஜகவில் இணைவதாக வந்த செய்திகள் வடிகட்டிய பொய் என தெரிவித்தார்.

தமாகா வட்டாரங்களில் விசாரித்த போது, கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக அழகிரி இது போன்று அறிக்கைகளை வெளியிடுவதாகத் தெரிவித்தனர்.