திமுகவின் திண்டாட்டத்திற்கு வைகோவின் ராசி தான் காரணமா?

மதிமுக தலைவர் வைகோ ராசி என்ற ஒன்று விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கையை ஒரு வழி ஆக்கியதாக கலாய்த்து வந்த நெட்டிசன்கள், அவர் திமுக கூட்டணியில் சேர்ந்ததில் இருந்தே, திமுகவுக்கும் கேப்டன் கதி தான் என ஓட்டி வந்தனர்.

தற்போது வேலூர் தேர்தல் ரத்து, கனிமொழி வீட்டில் சோதனை என்று ‘தரமான சம்பவங்கள்’ நடைபெறும் நிலையில், இதற்கெல்லாம் வைகோவின் ராசி தான் காரணம் என்று கூறி வருகின்றனர்.

விஜயகாந்தை முதல்வர் ஆக்கியே தீருவேன் என சபதம் எடுத்து, அவருக்கு வித்தியாசமான யோசனையை எல்லாம் கொடுத்து படுதோல்வியைப் பரிசாக அளித்ததில் இருந்து வலைத்தளத்தில் பலரும் வைகோவின் ராசியை கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

அனுபவம் வாய்ந்த‌ தலைவர் என்றாலும், அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தியவர் என்றாலும், அவர் சேரும் அல்லது ஆதரவு கொடுக்கும் கட்சி, அல்லது கூட்டணி தோல்வியைத் தழுவி விடுகிறது. இதனால், வைகோவை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.

மீம் மேக்கர்கள் மட்டுமில்லாமல், அரசியல்வாதிகளும் அவரை கலாய்க்கின்றனர். சமீபத்தில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், “வைகோ கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் திமுகவை மிகவும் கடும் சொற்களால் விமர்சனம் செய்தார்.

மறுபடியும் அவர்களிடமே கூட்டணி சேர்ந்துள்ளார். வைகோவிற்கு ஒரு ராசி இருக்கிறது. வைகோ செல்லும் கூட்டணி ஒரு போதும் விளங்காது. அது உருபடாமல் போய்விடும்,” என்றார்.

இதனிடையே, சமீபத்தில் வந்த ஒரு செய்தி இவ்வாறு கூறியது: “வைகோவுக்கு ஸ்டாலின் அறிவாலயத்தில் அதிக முக்கியத்துவமும், இடமும் கொடுக்கிறார் என்று திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கடுப்பேறி இருக்கிறார்கள்.

ஸ்டாலினின் மனைவி துர்காவிடம் ‘பழைய விஷயங்களையெல்லாம் தளபதி பெருந்தன்மையா மறந்துடலாம். ஆனா அரசியலுக்கு இந்த குணம் ஒத்து வருமா?’ என்று கேட்க, அவரும் யோசிக்கிறாராம். ராசி, செண்டிமெண்டுகளில் அதிக நம்பிக்கையுடைய துர்கா, வைகோவின் அரசியல் ராசியை நினைத்துப் பதட்டத்தில் உள்ளார்.”