காஞ்சனா இந்தி ரீமேக்கிலிருந்து வெளியேறிய லாரன்ஸ்: இது தான் காரணமா?

காஞ்சனா 3 வெற்றியைத் தொடர்ந்து இந்தியில் காஞ்சனாவை அக்‌ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து பாலிவுட்டில் கால் பதிக்கவிருந்த ராகவா லார‌ன்ஸ், தான் அந்த படத்திலிருந்து விலகுவதாக ஒரு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு படைப்பாளிக்கு பணம், புகழை விட தன்மானம் தான் முக்கியம் என்றும், நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தன்னுடைய பார்வைக்கு வராமலேயே வெளிவந்துவிட்டதாகவும், அந்த போஸ்டரின் டிசைன் தனக்கு திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல், ஒரு படைப்பாளியாக தான் இந்த விஷயத்தில் அவமதிப்பு செய்யப்பட்டதாகவும் இதன் காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

“நான் எனது பட ஸ்கிரிப்டை அப்படியே தர தயாராக இருக்கிறேன். காரணம், அக்‌ஷய்குமார் சார் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை வைத்திருக்கிறேன். அவர்கள் விருப்பம் போல் வேறு இயக்குநரை வைத்து இப்படத்தை எடுத்துக் கொள்ளலாம்.

விரைவில் நேரில் சென்று அக்‌ஷய்குமாரை சந்தித்து இந்த ஸ்கிரிப்டை அவரிடம் ஒப்படைத்து விட்டு, நல்ல முறையில் இப்படத்தில் இருந்து நான் வெளியேறி விடுவேன். ல‌ஷ்மி பாம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியில் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்,” என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி நாம் விசாரித்தபோது, பாலிவுட்டில் எப்போதுமே தென்னிந்திய, குறிப்பாக தமிழ் கலைஞர்களுக்கு எதிராக ஒரு லாபி செயல்படும் என்றும், அந்த லாபி தான் தற்போது லாரன்சுக்கு எதிராக வேலை செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

காஞ்சனா முதல் பாகம் இந்தியில் லட்சுமி பாம் (Laaxmi Bomb) என்ற பெயரில் ரீமேக் உருவாகி வருகிறது. லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாருகும், சரத்குமார் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார்கள். கதாநாயகியாக கியரா அத்வானி நடிக்கிறார்.

தற்போது லாரன்ஸ் விலகியுள்ளதைத் தொடர்ந்து, லட்சுமி பாமை யார் இயக்குவார்கள் எனக் கேள்வி எழுந்துள்ளது. மேலும், லாரன்ஸை சமாதானப் படுத்தவும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.