தீவிரவாதிகளின் புகலிடமா தமிழ்நாடு? திடுக் தகவல்கள்

கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ள நிலையில், தீவிரவாதிகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தின‌ர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல்களுக்கு சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த ஜஹ‌ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர்.

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த 12ந்தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை சோதனையைத் தொடர்ந்து மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனைகளிலும், விசாரணையிலும் திடுக் தகவல்கள் கிடைத்துள்ளதாம். தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் தீவிரவாதத்தை நோக்கி இளைஞர்களை ஈர்க்கவும், தாக்குதல்கள் நடத்தவும் திட்டங்கள் தீட்டப்பட்டு இருந்தனவாம். அதை தற்போது முறியடித்துள்ளனர்.