செருப்பு வீச்சு, வழக்குகள், போராட்டங்கள்: கமலுக்கு எதிராக சதி வலை பின்னப்படுகிறதா?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பள்ளப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பேசிய பேச்சுதான், அவருக்கு மிகப் பெரிய எதிரியாக அமைந்து விட்டது. இப்போதுவரை பாஜக, அதிமுக, இந்து அமைப்புகள் உள்ளிட்டவர்களின் புகார்கள், கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

நாடு முழுவதும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன, போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவ்வளவு ஏன், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. செருப்பு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தங்கள் வளர்ச்சி பிடிக்காமல் தங்களுக்கு எதிரான சக்திகள் செய்யும் சதி என மக்கள் நீதி மய்யம் பிரமுகர்கள் கூறி வரும் நிலையில், நடுநிலையாளர்களோ கமல் தனது நாவை அடக்காததால் ஏற்பட்ட வினையே இது எனக் கூறுகின்றனர். ‘இந்து மதத்துக்கு எதிராக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஏன் தேவையில்லாமல் பேச வேண்டும்’, எனக் கேட்கின்றனர்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பாக கமல்ஹாசன் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதி, வழக்கு மற்றும் வழக்கு விசாரணைக்கு தடை கோரும் மனுக்களை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது என்றும் வேண்டுமென்றால், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கமல்ஹாசன் 2 நாட்களாக தங்கியிருந்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லை.

அப்போது அவர் தன் மீதான வழக்கை எப்படி சமாளிப்பது என்பது குறித்து வக்கீல்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் அவர் மதுரை புறப்பட்டு சென்றார். கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி, டெல்லி பாட்டியாலா கோர்ட் முதல் மதுரை ஹைகோர்ட் வரை கேஸ் போடப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தொிவித்த கமல்ஹாசனுக்கு பல‌ அமைப்புகள் கடும் கண்டனம் தொிவித்து வருகின்றன. இதற்கு நேற்று விளக்கமளித்த கமல், நான் ஏற்கனவே கூறிய கருத்து சரித்திர உண்மை என்று கூறி எரியும் நெருப்பில் மேலும் பெட்ரோலை ஊற்றியுள்ளார்.