அதிமுகவுக்கு தாவப்போகும் ராதாரவி, திமுக அவரை நீக்கியதன் மர்மம்

கட்சியில தனக்கு உரிய மரியாதை கிடைக்கலைன்னு கடுப்பில் இருந்த நடிகர் ராதாரவி, திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவும் மனநிலையில் தான் கொஞ்ச நாளாவே இருந்தாராம். இது சம்மந்தமா அதிமுக தலைமைக் கிட்ட பேச்சுவார்த்தை நல்லபடியா போய்கிட்டு இருந்த போது தான் நயன்தாரா குறித்த தனது பேச்சால் சர்ச்சையில் மாட்டிக்கிட்டாராம்.

ராதாரவியின் முடிவை மோப்பம் பிடித்த திமுக தலைமை, அவர் சர்ச்சையில் சிக்கிய உடனே இது தான் தருணம்னு விளக்கம் கூட கேட்காம கட்சியை விட்டு நீக்கிடுச்சாம். இப்போ அவரது பேச்சால, அவரை உடனே சேர்த்துக்க அதிமுக தலைமை யோசிக்குதாம். கொஞ்ச நாள் போகட்டும், கண்டிப்பா நீங்க இங்க வரலாம் என்று அவருக்கு தகவல் போய் இருக்காம்.

‘நான் அதிமுகவுல சேர்ந்த பிறகு தான் திமுகவுக்கு இருக்கு கச்சேரி’ன்றது தான் ராதாரவியின் இப்போதைய மைன்ட் வாய்ஸ் என்று அவரை அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராதாரவி எத்தனையோ பேரை எப்படி எப்படி எல்லாலோ வசை பாடிய போதெல்லாம் அமைதியாக இருந்த திமுக தலைமை, அவர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கொலையுதிர்காலம் திரைப்பட முன்னோட்ட விழாவில் கலந்து கொண்டு நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசியவுடன் வீறு கொண்டு எழுந்து அவரை கட்சியிலிருந்து தற்காலிகமா நீக்கியது.

அது மட்டுமில்லாம, கட்சியின் தலைவர் மு க ஸ்டாலினே டிவிட்டரில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கடும் கண்டனம் தெரிவிச்சார்.

“நயன்தாராவை பற்றி நான் பேசியது அவர்களையும் அவர்களை கட்டிக்கப் போறவரையும் வருத்தப்பட செய்திருந்தால் அதற்கு நான் மனவருத்தப்படுகிறேன்,” என்று கூறிய ராதாரவி, திமுக தலைமை மீது தனக்கு இருக்கும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

“கட்சி எனக்கு ஒரு ஷோ காஸ்ட் நோட்டீஸ் அனுப்பி, ‘உன் மேல் இந்த தப்பு இருக்கு. உன்னை ஏன் கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது’ன்னு கேட்டு இருக்கலாம். அது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

திமுகவில் இருந்து நீக்கி விட்டதாக சொன்னார்கள். நீங்கள் என்ன நீக்குவது, நானே விலகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன். அரசியலில் இதெல்லாம் சகஜம்,” என்றார்.