Is Nayanthara a MGR or Rajini, Radha Ravi asks

எதை அடக்குனாலும் ராதாரவியோட வாயை மட்டும் அடக்க முடியாது போல. நயன்தாராவைப் பற்றி அவர் பேசிய பேச்சு பலத்த சர்ச்சையைக் கிளப்பி திமுக அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி இருக்கிற நிலையில, நடந்த சம்பவத்துக்கு தன்னிலை விளக்கம் அளித்து இருக்கிறார் ரவி.

இது பற்றி ஒரு இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “கே.ஆர். விஜயாம்மா சாமி வேடம் போடும்போது, அப்படியே அம்மன் மாதிரியே ஆகிவிடுவார். அந்த மாதிரி, நயன்தாராவும் தெலுங்குல சீதா வேடம் பண்றாங்க, இங்கே வேற வேற வேடம் எல்லாம் பண்றாங்க. என்ன வேடம் பண்ணினாலும் அவங்க சக்சஸ் பண்றாங்க. இதை நாம பாராட்டணும் அப்படி என்கிற அர்த்தத்தில் தான் பேசினேன்,” என்றார்.

மேலும் அவர், “ஒருவர் நயன்தாராவை எம் ஜி ஆர், ரஜினிகாந்த் அளவுக்கு உயர்த்தி பேசினார். நான் அதை அங்கேயே கண்டித்தேன். காரணம், அவர்கள் 2 பேரும் சினிமாவில் லெஜண்ட்ஸ். நயன்தாரா உழைப்பால் உயர்ந்த நடிகை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எம் ஜி ஆர், ரஜினிகாந்த்தோட ஒப்பிட்டு பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றார்.

“நயன்தாராவை பற்றி நான் பேசியது அவர்களையும் அவர்களை கட்டிக்கப் போறவரையும் வருத்தப்பட செய்திருந்தால் அதற்கு நான் மனவருத்தப்படுகிறேன்,” என்று கூறிய ராதாரவி, திமுக தலைமை மீது தனக்கு இருக்கும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

“கட்சி எனக்கு ஒரு ஷோ காஸ்ட் நோட்டீஸ் அனுப்பி, ‘உன் மேல் இந்த தப்பு இருக்கு. உன்னை ஏன் கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாது’ன்னு கேட்டு இருக்கலாம். அது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

திமுகவில் இருந்து நீக்கி விட்டதாக சொன்னார்கள். நீங்கள் என்ன நீக்குவது, நானே விலகிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன். அரசியலில் இதெல்லாம் சகஜம்,” என்றார்.

‘முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்.’

ராம ராஜ்ய‌ம் தெலுங்கு படத்தில் நயன்தாரா சீதையாக நடித்தது பற்றி கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி கூறிய மேற்கண்ட கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியது.

திமுக அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ள நிலையில், திரைத் துறையை சேர்ந்தவர்களும், பெண்ணியவாதிகளும் மற்றும் பலரும் அவருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.