பாமகவின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கப் போகிறதா திமுக?

பாமகவின் தேர்தல் அறிக்கையை நேற்று சென்னையில் வெளியிட்ட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தன‌ர்.

“இது வழக்கமான சம்பிரதாயத்துக்காக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை அல்ல. தமிழக மக்களின் தன்னாட்சி உரிமைக்குரல். தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் குரலாகவும் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகள் செய்யும் வேலையை பாமக இந்திய அளவில் மிகவும் சிறப்பாக செய்து வருகிறது. எங்களுடைய தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடிக்கக்கூடாது,” என்று கூறினர்.

பாமக தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்காகவே திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்ததாக நம்பும் ராமதாஸ், திமுக தேர்தல் அறிக்கை வந்தவுடன் அதை இன்ச் பை இன்சாக ஸ்கேன் செய்ய ஒரு ஸ்பெஷல் டீமை நியமித்துள்ளாராம்.

அவர்கள் எதையெல்லாம் பாமகவிடமிருந்து திமுக காப்பியடித்துள்ளதோ, அதை எல்லாம் கண்டுபிடிச்சி, அந்த பட்டியலை ராமதாஸ் கிட்ட கொடுப்பாங்க்களாம். அதை வைத்து திமுகவை கலாய்க்க திட்டமாம்.

ஏற்கனவே, அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக, பாமகவை திமுகவினர் கலாய்த்து வரும் நிலையில், “திமுக தலைவர் மு க ஸ்டாலினை பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சிக்காததா?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்யாததா? பழைய விஷயங்களை பற்றி பேசினால் யாரும் எந்த கூட்டணியிலும் இடம்பெற முடியாது. ஆனால் எங்களுடைய கோரிக்கையில் இருந்து நாங்கள் எள்ளளவும் பின் வாங்கவில்லை,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர், “நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவற்றில் எவற்றையெல்லாம், உடனடியாக நிறைவேற்ற முடியுமோ, அவற்றை நிறைவேற்றவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.