பாஜகவுக்கு அழகிரி ஆதரவு: வெளியே வந்த பூனைக்குட்டி உள்ளே போனதேன்?

நேற்று மதியம் தேர்தல் பரபரப்புகளுக்கிடையே எல்லாரும் லன்ச் முடித்து அசந்திருந்த வேளையில், திடீர்னு சமூக வலைதளங்களை ஒரு சுனாமி தாக்கிச்சு. அதாவது பாஜக தலைவர் எச் ராஜா திமுகவின் மறைந்த தலைவர் மு கருணாநிதியின் மகனும் தற்போதைய தலைவர் மு க ஸ்டாலினின் அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு க அழகிரியை சந்தித்து ஆதரவு பெற்றதாக ஒரு தகவல் வேகவேகமாக பரவிச்சு.

அழகிரியை ராஜா சந்தித்து சிரித்து மகிழ்வது போல ஒரு புகைப்படமும் பகிரப்பட்டு, ‘பிரதமர் மோடியை விட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. எனது ஆதரவு பாஜகவுக்கே,’ என்று அழகிரி சொன்னதாகவும் அந்த வாட்ஸாப் மற்றும் ஃபேஸ்புக் போஸ்ட் சொல்லிச்சு.

ஆனால், நேற்று இரவு இதற்கு விளக்கம் அளித்த அழகிரி தரப்போ, அப்படி ஒரு சந்திப்பு நிகழவே இல்லைன்னும், அழகிரி யாருக்கும் தன்னோட ஆதரவு அளிக்கலைன்னும் கூறியது. இதுக்கெல்லாம் பின்னணி என்னனு விசாரித்த போது, அழகிரி பாஜக ஆதரவு மனநிலைமையில இருப்பது உண்மை தான்னும், தேர்தல் நெருக்கத்தில் முறைப்படி அறிவிப்பு வரும்னும் சொல்றாங்க.

அதுவும், அந்த அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வரும் போது பெரிய அளவில் நடக்கும்னும், அதுக்கப்புறம் திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியங்கள் கொடுக்கும் படலங்கள் அரங்கேறும்னும் சொல்றாங்க.

சமீபத்தில், பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எம் ஜி ஆர் பெயர் வைக்கப்படும்னு அறிவித்தவுடன், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டவேண்டும் என மோடிக்கு அழகிரி கடிதம் எழுதினார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம் ஜி ஆர் பெயரை சூட்டியதற்கு நன்றி.
இதேபோல், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி திமுகவுல இருந்து ஓரம் கட்டப்பட்டாலும், மதுரையிலும் மற்ற தென் மாவட்டங்களிலும் செல்வாக்கோடத் தான் இருப்பதாக தகவல்கள் பாஜக தலைமையை எட்டடியிருக்கு. அதுமட்டுமில்லாம‌ அழகிரிக்கும் ரஜினிக்கும் நடுவே எப்போவுமே ஒரு ஸ்பெஷல் நட்பு உண்டு.

சமீபத்தில் அழகிரியை அவரோட பிறந்தநாள் அன்னிக்கு தொடர்பு கொண்ட ரஜினி அவரை சில குறிப்பிட்ட வார்த்தைகளால் வாழ்த்தி அன்பு மழையில திக்கு முக்காட வெச்சிட்டார்.

“நீங்கள் ஒரு நேர்மையான, நல்ல மனிதர். அரசியல் காலண்டரில் கடைசிப் பக்கம் என்பது யாருக்குமே கிடையாது. எதிர்காலத்தில் நீங்கள் எழுந்து வருவீர்கள்” எனக் கூறியிருக்கிறார். இந்த வாழ்த்து அழகிரியை நெகிழ வைத்ததோட மட்டுமில்ல, ரொம்பவே கான்பிடன்ஸை கொடுத்ததாம்.