அதிமுகவில் இணைகிறதா அமமுக? உண்மை நிலவரம்

அதிமுக-அமமுக இணையும் என மதுரை ஆதீனம் அண்மையில் இரண்டாவது முறையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை டிடிவி தினகரன் கடுமையாக மறுத்த போதிலும், அப்படி ஒரு ஆசை இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இருப்பது உண்மை தானாம்.

“தேர்தல் முடிவுகளை பொறுத்தே அதிமுக‍‍ அமமுக இணைப்பு திட்டம் முழுமையடையும். தினகரன் இப்போதைக்கு இதற்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு முடிவெடுப்பார்,” என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரான ராம் நாத் கோவிந்துக்கு தினகரன் ஆதரவளித்ததை சுட்டிக் காட்டும் அந்த வட்டாரங்கள், அதற்கு பின்னரும் பாஜக தனக்கு சாதகமாக இல்லாததால் தான் இவ்வளவு கடுமையாக இப்போது அந்த கட்சியை அவர் எதிர்க்கிறார் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.

தினகரனை அதிமுகவில் சேர்க்க மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அவர் நிச்சயம் அதிமுக வில் இணைவார் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவைத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைந்துள்ளது.

தினகரன் அதிமுகவோடு இணைவார் என்று கூறினேன். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார். அப்படியானால், அதிமுகவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தினகரன் சொல்வாரா?தேர்தலின்போது வேண்டுமானால் சேராமல் இருக்கலாம்.

ஆனால் நிச்சயமாக ஒருநாள் அதிமுகவோடு அமமுக இணைவது உறுதி என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறேன். அவருடன் யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் எனச் சொல்ல முடியாது. அதிமுக வலுப்பெற வேண்டுமானால் அவர் இங்கு இணைந்து செயல்பட்டால்தான் நல்லது. அவருக்கும் அதுதான் நல்லது,” என்றார்.

இதற்கு கடும் மறுப்பு தெரிவித்த தினகர‌ன், அவதூறு பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். “ஆதீனத்தின் கருத்தை நான் ஏற்கெனவே நாகரீகமாக மறுத்திருந்தேன். அதிலிருந்தே அவர் உண்மை நிலையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அவர் தனது பழைய பணியான தமிழரசு பத்திரிகையின் மக்கள் தொடர்பு அலுவலர் வேலையை இன்னமும் மறக்கவில்லை. எங்களுக்கே தெரியாமல் இணைப்புப் பேச்சு நடப்பதாக அவர் தொடர்ந்து பொய் சொல்வதைப் பார்த்தால், யாருக்கோ ஏஜெண்டாக இருக்கிறார். யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் தினகரன்.