இந்தியன் ஸ்பை திரில்லர் “சர்தார்” .. – நடிகர் கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதாவது

நடிகர் கார்த்தி பேசும்போது,

மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு..
பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த படத்தைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது. பக்கத்திலேயே இருக்கும் விஷயத்தை நாம் கவனம் செலுத்தவில்லை. அதை மித்ரன் புரிந்து கொண்டு படத்தை இயக்கியது நம் எல்லோருக்கும் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த படம் எல்லா மொழிகளிலும் நன்றாக ஓடியது. அதிலும் அவர் முதல் படம் என்பதே ஆச்சிர்யபட வைத்தது. அவர் மீது ஆர்வம் அதிகமானது. அதன் பிறகு ஹீரோ படத்தை இயக்கினார். பின்பு இந்த படத்திற்கு லக்ஷ்மன் சந்திக்க வைத்தார். அப்போது இந்த படத்தின் ஒரு வரியைக் கூறினார்.

மிலிட்டரியில் 80-ல் ஒரு உளவாளி குழுவை உருவாக்கினார்கள். மிலிட்டரிகாரர்களை உளவாளியாக நடிக்க சொல்லி கொடுத்தார்கள். பிறகு, ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஒரு நடிகரை மிலிட்டரிகாரராக மாற்றிவிட்டால் என்ன என்று யோசித்தார்கள். அதன்படி ஒரு நாடக நடிகரை அழைத்து வந்து பயிற்சி கொடுத்து உளவாளியாக மாற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தார்கள் என்று தகவல் கூறினார். அதைக் கேட்டதும் மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த கதையை முழுதாக எழுதிவிட்டு வாருங்கள் என்று கூறினேன். அவர் எழுதி விட்டு இந்தக் கதாபாத்திரம் இரட்டை கதாபாத்திரமாக மாறி இருக்கிறது என்று கூறினார். மறுபடியும் இரட்டை வேடமா? வேண்டாம் என்று கூறினேன். ஆனால் மித்ரன் கதை கேளுங்கள். இந்த கதைக்கு இரட்டை பாத்திரம் தேவைப்படுகிறது என்று கூறினார். கதைக் கேட்டதும் தானாகவே உளவாளிக்கான பல பார்வைகள் வந்தது. அனைத்து நடிகர்களின் வாழ்க்கையிலும் இது மாதிரி ஒரு காதபாத்திரம் நிச்சயம் வரும். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார் காலத்திலும் வந்திருக்கிறது. ரஜினி சார், கமல் சார் காலத்திலும் நடந்திருக்கிறது. அண்ணனும் அயன் படத்தில் பல்வேறு வேடங்களில் தோன்றினார். அவருக்கு எல்லாம் பொருந்தும் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு இந்த படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னுடைய கேரியரில் இது மிகவும் முக்கியமான படம். மேலும், எத்தனை வேடங்கள் போட்டாலும் எதற்காக போடுகிறோம் என்பதில் தான் அந்த வேடத்திற்கு மரியாதை கிடைக்கும். அதேபோல், நம் இந்திய உளவாளி, நம் மண்ணில் இருக்கும் ஒருவன், அவன் எப்படி சிந்திப்பான், எதற்காக உளவாளி ஆகிறான் என்பது எனக்கு பிடித்திருந்தது.

மேலும், அதை எப்படி ஏமாற்றாமல் உண்மையாக பண்ண முடியும் என்பதற்கு தான் பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டது. முதல்முறையாக வயதான தோற்றத்தில் நடிப்பதற்கு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. 40, 50 மற்றும் 60 வயதிற்கு மேல் உடல் ரீதியாக எப்படி மாற வேண்டும் என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தது.

இந்த படம் பெரிய விஷயத்தை பேசுகின்றது. அது எப்படி எளிமையாக புரிய வைக்கப் போகின்றோம் என்று நினைக்கும்போது தான் இப்படத்தின் ஹீரோ என்று கூறிய அதிசய குழந்தையாக ரித்விக் வந்தான். ஜூராசிக் பார்க் படத்தை நம்ப வைத்தது எது என்றால் குழந்தைகளின் ரசனை தான். அவர்களின் ரசனையும், அப்பாவித்தனமும் தான் நம்மை யதார்த்தில் நுழைய வைத்தது.

இறுதிக் காட்சியில் நானும் மித்ரனும் இது சரியாக வருமா? என்று பேசிக்கொண்டிருக்கும் போதே விஜி என்று ரித்விக் அழைப்பான். அங்கேயே எல்லாம் உடைந்து விட்டது. அப்போது, நம்முடைய பிரச்சினை அவனுடைய பிரச்சினையாக மாறியதை கவனித்தேன்.

மேலும், உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்ப்பை த்ரில்லராக இருக்கும். நாங்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்.

மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் என்று மித்ரன் கூறினார். அப்போது லைலாவிடம் பேசினேன். அவர் பிதாமகனில் பார்த்தது போலவே இன்னமும் அப்படியே இருக்கிறார். அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்தது படத்திற்கு பெரிய பலம் சேர்த்தது. பிறகு ராஷி கன்னா  வந்தார் அவர் வந்ததும் இப்படத்தை கமர்சியல் என்று சொல்லிவிடக் கூடாது என்ற பயம் வந்தது. ராஷி நம்ம ஊர் பெண்ணாக மாறுவதற்கு கடின முயற்சி எடுத்தார். அவரது கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சௌகார்பேட்டை பெண்ணாக கதையோடு ஒன்றி மாறினார். ரெஜிஷா முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவருடைய பாத்திரத்தைப் புரிந்துகொண்டு கதாபாத்திரமாகவே வந்தார். என்னமா? 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போல, முதல் நாளிலேயே வந்திருக்கிறாய் என்று கேட்கும்படி அழகாக உள்ளே வந்தார்.

உளவாளி படம் என்று கூறிவிட்டோம். ஆனால், பக்கத்திலேயே அமேசானும், நெட்ஃபிளிக்ஸ்-ம் இருக்கிறார்கள். பொன்னியில் செல்வன்-1 –ஐ சிவாஜி புத்தகம் படிப்பது போல் வீடியோ வெளியிட்டார்கள். அதுபோல, இப்படத்தை எப்படி காட்டப் போகிறார்கள் என்று ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஃபிரேம் வைக்கும் போதும் பயத்துடன் தான் பணியாற்றினோம்.

மேலும், ஒரு தளம் போடுவார்கள், பிரமாண்டமாக இருக்கும். இங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு இருக்குமா? என்று கேட்டால், இல்லையில்லை இரண்டு நாட்கள் தான் என்பார்கள். இதைப் பார்க்கும்போது தீரன் படம் தான் நினைவிற்கு வந்தது. அந்த படத்தில் என்னை ஓட வைத்துக் கொண்டே இருப்பார்கள். அதுபோல, இந்த படத்திலும் காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு தளம் மிகுந்த பொருட்செலவில் தயாரிப்பு நிறுவனத்தில் செய்து கொடுத்தார்கள். அதிலேயே இப்படத்தின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி. திலீப் மாஸ்டருடன் நிறைய ஒத்திகை பார்த்தோம். இறுதியாக படம் பார்க்கும்போது நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.

இப்படம் நன்றாக வருவதற்கு ஜி.வி.யும் முக்கிய காரணம். அவர் அமைத்துக் கொடுத்த தீம் இசை இப்படத்திற்கு ஒரு தரத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பிலும் அவருடைய இசையை கேட்டுத்தான் காட்சிகள் அமைத்தோம். வில்லனாக நடித்த சங்கி சாருக்கு நன்றி. மித்ரன் முதலில் வில்லன் கதாபாத்திரம் எழுதிவிட்டு தான் மற்ற பாத்திரங்களை எழுதுவேன் என்றார். வில்லன் பாத்திரம் எப்படி சிந்திப்பான், அவனுடைய சித்தாந்தம் என்ன என்பதை கூர்ந்து எழுதினார். எனக்கு இரட்டை வேடம் ஆகையால், வில்லனைவிட என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று மித்ரனிடம் கூறினேன். ஏனென்றால், இன்று நம் ஒவ்வொருவருக்குமே அவரவர் செய்யும் வேலைகளில் அங்கீகாரம் தேவைப்படுகிறது. நாம் ஒரு சிறிய செயல் செய்தாலும் சமூக வலைதளங்களில் லைக், கமெண்ட் வேண்டும் என்பதிற்காக பதிவிடுகிறோம். அப்படி இருக்கும்போது, உளவாளி என்பவர்கள் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் அவர்கள் செய்யும் செயல்கள் வெளியே தெரியாமல் சேவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியும் மக்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறது. அப்படிப்பட்ட தியாகம் செய்யக் கூடிய கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. சர்தாராக ஒவ்வொரு வசனம் பேசும்போதும் உறுதியாக உணர்ந்தேன். அதற்கு எதிராக விஜி என்கிற பாத்திரம். நான்கு பேருக்கு நல்லது செய்தால் கூட, அதை 40 ஆயிரம் பேருக்கு தெரியும்படி செய்ய வேண்டும் என்று நினைப்பவன். இரட்டை வேடத்தில் நடிக்கும்போது முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், ஒரு கதாபாத்திரம் போலீஸ், இதில் தீரனோ, சிறுத்தை கதாபாத்திரத்தின் சாயலோ வரக்கூடாது என்று நினைத்தேன். அது அழகாக அமைந்தது. அதிலும், ரித்விக் உடன் இருக்கும் காட்சிகளில் நான் உற்சாகமாக இருந்தேன். பார்த்த உடனேயே நீங்கள் போலீஸா? நான் நம்ப மாட்டேன் என்று கூறிவிட்டான். அவனை சமாதானப்படுத்துவதே பெரும் பாடாக இருந்தது.

ஒரு குழுவாக இணைந்து ஆய்வுக் கூடத்தில் பணியாற்றுவது போல் தான் நான், ஜார்ஜ், திலீப் மற்றும் மித்ரன் பணியாற்றினோம். இறுதியாக ரூபனிடம் கொடுத்தோம். மித்ரன் இப்படத்திற்கு 3 வருடமாக செய்த ஆராய்ச்சியை கூறினால் அது ஆவணப் படமாகி விடும். தீபாவளி அன்று வெளியாவதால், எந்த விஷயம் இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என்பதை பிரித்து எடுத்து 3இ என்று சொல்லக்கூடிய பொழுதுபோக்கு, ஈடுபாடு மற்றும் எட்ஜுகேட் கொடுத்தது மிக முக்கியமான வேலையாகப் பார்க்கிறேன். தீபாவளி அன்று வெளியாவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், தீபாவளி அன்று வெளியாகும் படங்களை நினைவில் வைத்திருப்பார்கள். இனிமேல் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அப்படி ஒரு படமாக சர்தார் இருக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

மேலும், இப்படத்தை ரெட் ஜெயிண்ட் வழங்குகிறார்கள் என்பது மிகப் பெரிய தைரியம் கொடுக்கிறது. படத்தை யார் எடுத்துக் கொண்டு சென்றாலும் உதவும் மனப்பான்மையுடன் விநியோகிக்கிறார்கள். அனைத்து படங்களுமே எந்தவித சிக்கலும் இல்லாமல் வெளியாகிறது. இதற்காக ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும், உதய்க்கும், ராஜா மற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த வெற்றிக்கு நீ தகுதியாக இருக்கிறாயா? என்று யோசித்துப் பார் என்று அண்ணன் கூறுவார். அந்த தகுதிக்கு ஏற்ப நாங்கள் உழைத்திருக்கிறோம் என்று நம்புகிறேன். தீபாவளிக்கு சர்தார் மற்றும் சிவாவின் பிரின்ஸ்-ம் வருகிறது. இரண்டு படங்களும் வெவ்வேறு கேளிக்கையுடன் வருகிறது. அனைவருக்கும் சிறப்பு தீபாவளியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

வந்தியதேவனுக்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதன்பிறகு வேறொரு படம் கொடுக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

முனீஸ்காந்த் சார் அருமையான நடிகர். அவர் அருகில் இருந்து அவரை ரசித்துக் கொண்டே இருந்தேன். வி.கே.ராமசாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எது பேசினாலும் அழகாக இருக்கும். சும்மா நின்றுக் கொண்டிருந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அவரை மாதிரி தான் முனீஸ்காந்த் சாரையும் பார்த்தேன். என்னுடைய சித்தப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை அவர் செய்வதே அழகாக இருக்கும். அவருடன் பணியாற்றியதில் உற்சாகமாக இருந்தேன். ஒவ்வொரு வேடம் போடுவதற்கும் இரவு பகலாக பணியாற்றிய பிரவினுக்கு நன்றி. அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. பல பேருக்கு இரவு பகல் பாராது உழைத்ததில் உடல்நலம் சரியில்லாமல் போனார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி என்றார்.

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது,

இப்படத்தின் டிரைலர் வெளியாவதில் உற்சாகமாக உள்ளேன். இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த மேடையை ஒப்படைக்கிறேன் என்றார்.

இயக்குநர் பி எஸ் மித்ரன் பேசும்போது,

இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நிறைய மெனக்கெடல் இருந்தது. நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அதற்கு முதல் காரணம் லக்ஷ்மன் சார் தான். எல்லாத்தையும் தாண்டி நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்வளவு பணம் செலவு செய்து படம் எடுக்கிறோம் என்றால் அதற்கு தேவையான நம்பிக்கையை அவர் தான் கொடுத்தார். இரவும் பகலுமாக வேலை செய்துள்ளோம். நடிகர்கள், துணை இயக்குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இரவும் பகலுமாக வேலை செய்துள்ளனர். உடல் ரீதியாகவே இது ஒரு கடினமான படம். கிட்ட தட்ட ஒரு பயிற்சி மாதிரி.

கார்த்தி சார் நான் உங்களை மிகவும் சிரமப் படுத்தியுள்ளேன். ஏனென்றால், ஏகப்பட்ட வித்யாசமான தோற்றங்கள் அவருக்கு இருந்தது. ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏற்றவாறு தயாராக வேண்டும்.

இதுவரை நான் வேலை பார்த்த நடிகர்களை விட கார்த்தி சாருக்கு அவரின் நடிப்பின் மேல் ஈடுபாடு அதிகம். அவருடைய உடை, முடி, மேக்கப் அனைத்திலும் அவர் கவனத்துடன் இருப்பார். அது எனக்கொரு பயம் தந்தது. நாம் அதை விட்டுவிடக் கூடாது என்ற ஒரு எண்ணத்தை தந்தது. அவருடைய ஒத்துழைப்பும், சிரமமும் எனக்கு ஊக்கமளித்தது. இந்தப் படத்தில் நடித்ததற்கு கார்த்தி சாருக்கு நன்றி.

ரஜிஷா தான் இந்தப் படத்திற்கு அரவணைப்பு கொடுத்தார். ஆக்ஷன் திரில்லர் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பு தந்ததற்கு ரஜிஷாவுக்கு பெரும் பங்குள்ளது.

ராஷி கண்ணா அவர் மிகவும் வலிமையான மற்றும் அறிவார்ந்த நடிகர். முதல் முதலில் நான் அவரை சந்தித்தப் போது, இவர் வட மாநிலத்தை சேர்ந்த பெண். அதனால் ஆங்கிலத்தில் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால், அவரை சந்தித்ததுமே “ஹாய் சார், எப்படி இருக்கீங்க” என்று தமிழில் பேச ஆரம்பித்தார். அதன் பிறகும் தமிழில் தான் பேசினார். அவர் சிறந்த நடிகர், மிகவும் வலிமையாக தனிமையிலுள்ள ஒரு கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்.

லைலா மேடமுடன் முதலில் நான் தொலைபேசியில் பேசிய போது, என்னை மேடம் என்று அழைக்காதீர்கள். லைலா என்று அழையுங்கள் என்றார். உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை மேடம் என்று தான் அழைப்பேன் என்றேன். ஆனால், அவர் படம் வெளியான பின்பு என்னை மேடம் என்று அழைக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். நானும் அவரை படம் வெளியான பின்பு மேடம் என்று அழைக்கப் போவதில்லை.
அவர் ஒரு அற்புதமான நடிகை, நான் சிறுவயதில் “கண்ணாலே மியா மியா” பாடலை தான் கேட்டு ரசிப்பேன். முதல் முறை அவரை பார்த்தபோதும் அந்தப் பாடல் தான் நினைவுக்கு வந்தது. இப்படத்தில் லைலா மேடம் நடித்ததற்கு எனக்கு பெருமையாகவுள்ளது.
நாங்கள் இப்படத்தில் வில்லனை மிகவும் வலிமையான கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தோம். அப்போது தான் “பேகம் ஜான்” என்ற படத்தைப் பார்த்தேன். அதில் சங்கி பாண்டே சார் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார். அதன் பின் அவரிடம் கேட்டபோது அவர் உடனே ஒப்புக் கொண்டார். அவருக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு அவருக்கு நன்றி.

என் நண்பர்கள், ரூபன், ஜார்ஜ், திலீப் இவர்கள் எல்லாம் என்னுடைய தூண்கள் என்றே சொல்லலாம். இவ்வளவு பெரிய படத்தை இயக்குகிறேன் என்றால், அதற்கு இவர்கள் என்னுடன் இருக்கும் தைரியத்தால் தான். இவர்கள் யாரும் என்னை ஒரு இயக்குனராக பார்க்க மாட்டார்கள். என்னை தலையில் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். அது எனக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்.

கலை இயக்குனர் கதிர் சார் தான் இந்த படத்தில் அதிகப்படியான சித்திரவதை அனுபவித்தவர் என்று நினைக்கிறேன். அவரை 7 அல்லது 8 நாட்கள் தளம் அமைக்கச் சொல்லிவிட்டு நாங்கள் இரண்டு நாட்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு கிளம்பிவிடுவோம். பின்பு அவரை வேறு ஒரு தளம் அமைக்கச் சொல்லி கேட்போம். 80 காலகட்டத்தை மீண்டும் அமைக்கும் பணி அவருடையது. அதை அவர் சிறப்பாகவே செய்துள்ளார்.

ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் இந்த படத்தை தவிர வேறு எந்தப் படத்திற்கும் இவ்வளவு ஆடைகளை வடிவமைத்திருக்க மாட்டார். இந்த படத்தில் அவ்வளவு வித்தியாசமான ஆடைகள் தேவைப்பட்டது.

நாங்கள் மிகவும் உறுதியான நம்பிக்கையோடு படப்பிடிப்பை ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பட்டணம் ரஷீத் சார் தான். அவர் தான் ஹீரோவின் தோற்றத்திற்கு வடிவம் அமைத்து தந்தார். எனக்கும் கார்த்தி சாருக்கும் சிறிய தயக்கம் இருந்தது. காரணம், முதல் முறையாக கார்த்தி சார் இப்படி ஒரு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது தான். ஆனால், பட்டினம் ரஷீத் சார் அவரின் அனுபவத்தை படத்திற்காக கொடுத்தது ஒரு முக்கியமான விஷயம்.

ஜி வி பிரகாஷுடன் முதல் முறை வேலை பார்க்கிறேன். இசை, பின்னணி இசை அமைக்கும் வேலை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது. பண்டிகை நாட்களில் வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. படம் நன்றாக இருக்கும் என நம்புகிறோம், நன்றி என்றார்.

கலை இயக்குனர் கதிர் பேசும்போது,
இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். உலகத்தினுடைய ஒரு பிரச்சனையை கேள்வி கேட்கும். நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது,

எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. இது என் நண்பர்கள் மித்ரன் – ஜார்ஜ் உடனான ஒரு பயணம் தான். 10 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த படம். இதை முதலில் லக்ஷ்மன் சாரிடம் கொண்டு சென்றோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பளித்ததற்கு நன்றி. அதன் பின்பு தான் கார்த்தி சார் இணைந்தார். இந்த படத்தை மித்ரனின் ஒரு பார்வையாக தான் நான் பார்க்கிறேன்.

கார்த்தி சார் எது செய்தாலும் இரண்டு முறை செய்யவேண்டும். டபுள் ஆக்ஷன் என்பதால். இதுவரை கார்த்தி சார் நடித்த படங்களை விட இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார்.

கதிர் சார் எங்களுக்கு சித்தப்பா மாதிரியான ஒருவர். அவர் ஒரு நல்ல வழிகாட்டி. இந்த படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. இப்படம் ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்றார்.

மாஸ்டர் ரித்விக் பேசும்போது,

இது என்னுடைய இரண்டாவது படம். திரையரங்கில் வெளியாவதில் முதல் படம். அதிலும் தீபாவளிக்கு வெளியாவதில் ரொம்ப சந்தோஷம். கார்த்தி சாருடன் நடித்ததில் மிகப் பெரிய சந்தோஷம். இந்த படத்திற்காக என்னை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளர் லக்ஷமன் குமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. பி.எஸ்.மித்ரன் சாருக்கும் பெரிய நன்றி என்றார்.

நடிகை ரஜிஷா பேசும்போது,

மித்ரன் சாருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஏனென்றால், என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தைப் பற்றி இப்போது கூற இயலாது. இதுபோன்ற வலிமையான கதாபாத்திரத்தை என்மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் சாருக்கு நன்றி.

கார்த்தி சார் பொறுமை மற்றும் அன்பான நடிகராக இருந்தார். இதுபோன்ற கொடுக்கும் மனப்பான்மை கொண்ட நடிகருடன் நான் இதுவரை நடித்ததில்லை. என்னை அழகாக காட்டிய ஜார்ஜ் சாருக்கு நன்றி. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

நடிகை ராஷி கண்ணா பேசும்போது,

இப்படத்தின் டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். மித்ரன் மிகவும் சிறந்த இயக்குநர். மித்ரன் போன்ற இயக்குநர்கள் கையில் தமிழ் சினிமா பாதுகாப்பாக உள்ளது. பல கதாபாத்திரங்கள் அமைத்து, பெண்ணியம் மற்றும் சமூக கருத்துகளையும் பொறுப்புணர்வோடு கதை அமைப்பது கடினம். அப்படியொரு ஒரு கடினமாக கதையை மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் கையாண்டிருக்கிறார் மித்ரன். அவர் இயக்கும் அனைத்துப் படங்களையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல் அவரது இயக்கத்தில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன்.

சங்கி பாண்டே சார் அருமையாக நடித்திருக்கிறார். அவரை திரையில் பார்க்க ஆசைப்படுகிறேன். ஜார்ஜ் எனக்குப் பிடித்த ஒளிப்பதிவாளர். இந்த படத்தில் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.

கார்த்தி மிகவும் பாதுகாப்பான நடிகர். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ரஜிஷா நன்றாக நடித்திருக்கிறார். அவர் இன்னும் நிறைய தமிழ் படங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் திலிப் சுப்புராயன் பேசும்போது,

கார்த்தி சாருடன் நான் பணியாற்றிய அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வரிசையில் இப்படமும் ஹிட் தான்.

இப்படத்தின் ஆக்ஷனில் நிறைய வித்தியாசமான சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளோம்.

இந்த தீபாவளி சரவெடி தீபாவளியாக இருக்கும் என்றார்.

நடிகர் சங்கி பாண்டே பேசும்போது,

கார்த்தி சார் சினிமாவிற்கான அவர் செய்யும் அர்ப்பணிப்பு நம்ப முடியாத ஒன்று. நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததால் ஹீரோயின்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தை என் ஹிந்தி மொழியில் நீங்கள் வெளியிடவில்லை என்ற கேள்வி தான். இது ஒரு ‘பான்’ இந்தியன் படம் போன்று உள்ளது. நிச்சயம் அனைவரும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்றார்.

நடிகை லைலா பேசும்போது,

கார்த்தி சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. கார்த்தி சாரின் குடும்பத்திலுள்ள அனைவருடனும் நடித்துவிட்டேன். என்னை மீண்டும் திரைத்துறைக்கு அழைத்து வந்த பி எஸ் மித்ரனுக்கு நன்றி என்றார்.

Karthi speech
https://we.tl/t-OUOUcq4TO4

Producer Lakshman kumar Speech
https://we.tl/t-IIo9OXnGDF

Rashi khanna Speech
https://we.tl/t-ow7MWX17LD

Rajisha vijayan Speech
https://we.tl/t-HKpVAVAofz

P.s. Mithran Speech
https://we.tl/t-dI6wWHbmA9

Editor Ruben Speech
https://we.tl/t-lIsJZQ29eX

Laila Speech
https://we.tl/t-id2DFYqnHL

Stunt master dilip subburayan Speech
https://we.tl/t-6iR9TC4acH

Chunkey panday Speech
https://we.tl/t-MLwavK4Sik

Art Director kathir Speech
https://we.tl/t-tAmdF3xO6K

Master rithvik Speech
https://we.tl/t-ywySBnPKJ1

Share this:

Exit mobile version