உலகளாவிய எரிசக்தி உரையாடலுக்கான களமாக அமையும் ‘இந்திய எரிசக்தி வாரம் 2027’ கொல்கத்தாவில் நடைபெறவிருக்கிறது
- 2027 ஜனவரி 28 முதல் 31 வரை இந்திய எரிசக்தி வாரம் (IEW) 2027 நிகழ்வை நடத்தும் நகரமாக கொல்கத்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாண்புமிகு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி மற்றும் மாண்புமிகு மேற்கு வங்க முதல்வர் திரு. சுவேந்து அதிகாரி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
- போபால், சென்னை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களை கொல்கத்தாவுடன் இணைத்து, இந்திய எரிசக்தி வாரம் 2027-க்கான பல நகர அறிமுக நிகழ்ச்சியை பிபிசிஎல் (BPCL) நடத்தியது.
ஃபார்ச்சூன் குளோபல் 500 மற்றும் மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), இந்திய எரிசக்தி வாரம் (IEW) 2027-க்கான அறிமுக நிகழ்ச்சிகளை இன்று சென்னை, போபால் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் ஒருங்கிணைத்து நடத்தியது. இந்த நிகழ்வுகள் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரதான அறிமுக நிகழ்வுடன் நேரலையாக இணைக்கப்பட்டிருந்தன.
இந்நகரங்களில் பிபிசிஎல் நடத்திய இந்த ஒருங்கிணைந்த நிகழ்வுகளில் எரிசக்தித் துறையின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஊடகங்கள் மற்றும் மாணவர் சமூகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நாட்டின் முக்கிய எரிசக்தி மையங்களான இந்நகரங்களில் உள்ள பார்வையாளர்களுக்கு தேசிய மற்றும் உலகளாவிய எரிசக்தி உரையாடல்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இது வழங்கியது. இந்நிகழ்வுகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியின் நேரலையும், IEW 2027-ன் முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் எரிசக்தித் துறையில் உருவாகி வரும் வாய்ப்புகளை சுட்டிக்காட்டும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
“கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல். எரிசக்தியைப் பாதுகாத்தல். நாளைய உலகை உருவாக்குதல்” என்ற கருப்பொருளின் கீழ் 2027 ஜனவரி 28 முதல் 31 வரை கொல்கத்தாவில் முதன்முறையாக நடைபெறவுள்ள இந்திய எரிசக்தி வாரத்தின் ஐந்தாவது பதிப்பு, இந்த ஆண்டின் முதல் முக்கிய உலகளாவிய எரிசக்தி மாநாடாக அமையும். உலகளாவிய எரிசக்தி (ஆற்றல்) பாதுகாப்பை வலுப்படுத்தவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் கொள்கை வகுப்பாளர்கள், எரிசக்தித் துறை தலைவர்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்கள் என உலகெங்கிலும் உள்ள பலரையும் இந்த மாநாடு ஒன்றிணைக்கும்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் நடைபெறும் இந்திய எரிசக்தி வார நிகழ்வானது, 2023-ல் பெங்களூருவில் தொடங்கப்பட்டதிலிருந்து, அதன் அளவிலும், சர்வதேச பங்கேற்பிலும், விவாதிக்கப்படும் பிரச்சினைகளின் பரப்பிலும் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. 2026-ல் கோவாவில் நடைபெற்ற நான்காவது பதிப்பு நிகழ்வில், 75,000-க்கும் மேற்பட்ட எரிசக்திதுறை வல்லுநர்கள், 700-க்கும் மேற்பட்ட கண்காட்சி நிறுவனங்கள், 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் மற்றும் 6,500-க்கும் மேற்பட்ட மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டது இதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
உலகளாவிய எரிசக்தி அமைப்பில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதோடு இணைந்தே இந்திய எரிசக்தி வாரத்தின் பரிணாம வளர்ச்சியும் நிகழ்ந்துள்ளது. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் என்ற வகையில், இந்தியாவின் எரிசக்தித் தேவை வேகமாக விரிவடைந்து வருகிறது. அதே வேளையில், தூய்மையான எரிசக்தி அமைப்புகளை நோக்கிய அதன் பயணத்தில் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படியாகும் விலை
ஆகியவற்றையும் நம் நாடு தொடர்ந்து சமன் செய்து வருகிறது. எனவே, இந்தியாவின் எரிசக்தித் தேர்வுகள் அதன் எல்லைகளையும் கடந்து தாக்கங்களை ஏற்படுத்துகின்றன; இது உலகளாவிய எரிசக்தி உரையாடலுக்கான ஒரு மையமாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளது.
இத்துறை சார்ந்த பல்வேறு வாய்ப்புகளை ஆராய, எரிசக்தி மதிப்புச் சங்கிலி முழுவதும் உள்ள பங்குதாரர்களுக்கு இந்த நிகழ்வு விவாதத்திற்கான சிறந்த தளத்தை வழங்கும். இந்தக் கண்காட்சி மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கருப்பொருள் சார்ந்த மண்டலங்கள், வெவ்வேறு நாடுகளின் பெவிலியன்கள், தலைவர்களுக்கிடையே விவாதங்கள், அமைச்சக அளவிலான அமர்வுகள், கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சிகள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான பிரத்யேக தளங்களும் இடம்பெறும்.
சென்னையில், அண்ணா பல்கலைக்கழகத்தின், பல்கலைக்கழக – தொழில்துறை ஒத்துழைப்பு மையத்தில் (CUIC) பிபிசிஎல் இந்த அறிமுக நிகழ்ச்சியை நடத்தியது. பிபிசிஎல்-ன் நிதித்துறை இயக்குநர் திரு. வேட்சா ராமகிருஷ்ண குப்தா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், பேராசிரியர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் ஊடகத்தினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிபிசிஎல்-ன் நிதித்துறை இயக்குநர் திரு. வி.ஆர்.கே. குப்தா கூறுகையில், “இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டில் நிலைமாற்றம் என்பது ஒரு பெரிய அளவிலான சவாலாகும்; எரிசக்தியை மலிவானதாகவும், பாதுகாப்பானதாகவும், படிப்படியாக தூய்மையானதாகவும் வைத்திருக்கும் அதே வேளையில், அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. இந்த மாற்றம் வழக்கமான மற்றும் புதிய எரிசக்திக்கு இடையே ஏதாவதொன்றை தேர்வு செய்வதாக இருக்க முடியாது; எதிர்கால எரிசக்தி அமைப்புகளில் முதலீடு செய்யும் அதே வேளையில் தற்கால தேவைகளையும் நாம் நம்பகத்தன்மையுடன் பூர்த்தி செய்ய வேண்டும். பிபிசிஎல்-ல், எங்களின் தற்போதைய எரிசக்தி உள்கட்டமைப்புடன், உயிரி எரிபொருள்கள், பசுமை ஹைட்ரஜன், மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் செய்யப்பட்டு வரும் எங்களது முதலீடுகள் இந்த சமநிலையைப் பிரதிபலிக்கிறது. தொழில்துறையினர், முதலீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஒன்றிணைந்து, புதிய தொழில்நுட்பங்களை ஆராய்வதற்கும், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஒரு முக்கியமான செயல்தளத்தை ‘இந்திய எரிசக்தி வாரம் 2027’ நிகழ்வு வழங்கும்” என்றார்.
போபால், சென்னை மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த நிகழ்ச்சிகளின் மூலம், இந்திய எரிசக்தி வாரத்தின் உரையாடலை கண்காட்சி அரங்கிற்கு வெளியேயும் பிபிசிஎல் வெற்றிகரமாக எடுத்துச் சென்றிருக்கிறது. ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வுக்கான வாய்ப்புகளையும் இந்த நிகழ்ச்சிகள் முன்னிலைப்படுத்தின.
நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை ஆராயவும், கூட்டாண்மைகளை உருவாக்கவும் மற்றும் எரிசக்தித் துறை முழுவதும் புதுமையான கண்டுபிடிப்புகள் செயல்படுத்தப்படுவதை துரிதப்படுத்தவும் பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்து, உலகளாவிய எரிசக்தி உரையாடலை வடிவமைப்பதிலும் இந்தியாவின் பங்கை ‘இந்திய எரிசக்தி வாரம் 2027’ மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.