“நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே செய்வேன்” ; சுனைனா தீர்க்கமான முடிவு

பேசமுடியாமல் கண்கலங்கிய நடிகை சுனைனா !
பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி !!

*’ரெஜினா’ பட கேரள புரமோஷன் நிகழ்ச்சியில்..

ரெஜினாவின் இதயத்திற்கு இசையால் உயிர்கொடுத்துள்ளார் சதீஷ் ; சுனைனா பாராட்டு

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’.
நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை மலையாள இயக்குநர் டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.

இந்தப்படம் வரும் ஜூன்-23ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் தாண்டி, ஆந்திரா, கேரளாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் கேரளாவில் கொச்சியில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர், இயக்குனர் டொமின் டி’சில்வா, நாயகி சுனைனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், மலையாள திரையுலகை சேர்ந்த கதாசிரியரும் இயக்குனரும் 90களில் டாக்குமென்டரி படங்களை இயக்கி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவரும் தயாரிப்பாளர் சதீஷ் நாயரின் அண்ணன் பிரதீப் நாயர் கலந்து கொண்டு வரவேற்புரை அளித்தார்.

இந்த நிகழ்வில் நடிகை சுனைனா பேசும்போது, “இயக்குனர் டொமின் டி’சில்வாவுக்கும் தயாரிப்பாளர் சதீஷுக்கும் இந்த வாய்ப்பை தந்ததற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், சில்லுக்கருப்பட்டி படத்தில் எனது நடிப்பை பார்த்து விட்டு தான் இந்த படத்தில் நடிக்க அழைத்ததாக இயக்குனர் டொமின் டி’சில்வா கூறினார்.

இங்கே திரையிடப்பட்ட வீடியோக்களில் என்னை பார்க்கும்போது சினிமாவில் நான் நடிப்பதற்கு முன்பு இருந்த இளம் வயது சுனைனாவை பார்ப்பது போல் இருந்தது. இதெல்லாம் ஒரு காலத்தில் எனக்கு கனவு போல இருந்தது. இப்போது அது நிஜமாகி உள்ளது. அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ( தொடர்ந்து பேச முடியமால் சில நொடிகள் சுனைனா கண்கலங்கினார் ).

தொடர்ந்து பேசும்போது, “எனது குடும்பத்தில் இருந்தும் தமிழ் ரசிகர்களிடமிருந்தும் எனக்கு அன்பும் ஆதரவும் நிறையவே கிடைத்திருக்கிறது.. அவர்களுக்கு ரொம்பவே நன்றி உடையவளாக இருக்கிறேன். இந்த படம் எனது திரையுலக பயணத்திலேயே மிக முக்கியமாக படங்களில் ஒன்றாக இருக்கும்.

ஏனென்றால் 2018-ல் ஒரு கட்டத்தில் நான் என்ன பண்ண வேண்டும் என எல்லோரும் எனக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்ததால் ரொம்பவே களைப்படைந்து விட்டேன். ஆனால் நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே செய்வேன் என 2018-ல் முடிவு செய்தேன். அதைத்தொடர்ந்து ஒரு நடிகையாக, எனக்கு உண்மையாக இருப்பது போன்று உணரும் படங்களாக தேர்வு செய்ய ஆரம்பித்தேன்.

‘நிலா நிலா ஓடி வா’ என்கிற வெப்சீரிஸில் நடிக்க தொடங்கினேன். அந்த சமயத்தில் பல பேருக்கு வெப் சீரிஸ் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது.. இந்தியாவில் பெரும்பாலும் சீரியல்களிலும் தொடர்களிலும் நாம் பிரபலமாக இருந்தோம் என்பதால் பல பேர் அதில் ஆர்வம் காட்டாத சமயம் அது. ஆனால் எனக்கு வெப்சீரிஸ் கதை பிடித்திருந்தது. அதனால் தான், “எனக்குப் பிடித்ததை நான் பண்ணுவேன்” என முடிவெடுத்தேன்.

அதன் பிறகு தமிழில் சில்லுக்கருப்பட்டி, தெலுங்கில் ராஜராஜ சோரா போன்ற, ஒரு நடிகையாக எனக்கு மகிழ்ச்சி தரும் வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தேன். ரெஜினாவும் அந்த பட்டியலில் ஒன்றாக இடம்பிடிக்க போகிறது. இதுபோன்ற படங்களில் தான் நான் நடிக்க விரும்புகிறேன். என்னுடைய ரசிகர்களுக்கு விதவிதமான கதாபாத்திரங்களை கொடுப்பதற்கு விரும்புகிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் எனது வித்தியாசமான கதாபாத்திர அனுபவங்களை அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

*ரெஜினா என்கிற சாதாரண ஒரு குடும்பப்பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஏற்ற இறக்கங்கள் தான் இந்த படத்தின் கதை. படம் பார்த்தபோது ரெஜினாவின் உலகத்திற்குள் நான் நுழைந்தது போன்று உணர்ந்தேன்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் ஒரு இசையமைப்பாளராகவும் தனது திறமையை இதில் வெளிப்படுத்தியுள்ளார். தனது இசையால் ரெஜினாவின் இதயத்திற்கு உயிர் கொடுத்து உள்ளார். இனிவரும் நாட்களில் அவர் தயாரிப்பாளராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ இந்த திரையுலகில் தனது பயணத்தை எப்படி தொடர்ந்தாலும் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.

எனக்கும் ஒளிப்பதிவாளர் பவி கே.பவனுக்கும் படப்பிடிப்பு தளத்தில் மொழியை புரிந்துகொள்வதில் பிரச்சனை இருந்தாலும் எங்களுக்குள்ளான வேலை செய்யும் கெமிஸ்ட்ரி அழகாக ஒத்துப்போனது. மலையாள ரசிகர்கள் எனக்கு ரொம்பவே முக்கியம் கொச்சி எப்போதுமே எனக்கு சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வைத் தான் கொடுக்கும்”* என்று கூறினார்.
.

Share this:

Exit mobile version