“மாநாடு படம் போல ஒரு மார்க் ஆண்டனியிலும் ஒரு அதிர்வை உணர்ந்தேன் “ ; எஸ்.ஜே.சூர்யா

Mark Antony (Tamil) Official Trailer | Vishal | SJ Suryah | GV Prakash | Adhik | S.Vinod Kumar

“மார்க் ஆண்டனி மூலம் ஒரு ஸ்பெஷல் எனர்ஜி கிடைத்தது போல இருக்கிறது” ; தயாரிப்பாளர் வினோத்குமார் மகிழ்ச்சி

”ராமருக்கு அணில் போல மார்க் ஆண்டனியில் பங்களிப்பு செய்துள்ளேன்” ; டி.ராஜேந்தர் நெகிழ்ச்சி

“நடிகர் சங்கம் என்றால் அது கார்த்தி தான்.. நான் அல்ல” ; நண்பன் குறித்து விஷால் பெருமிதம்

”ஆதிக்கின் கடந்த காலத்தை பார்க்க விரும்பவில்லை” ; மார்க் ஆண்டனி விழாவில் விஷால் ஓபன் டாக்

”மார்க் ஆண்டனியில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா வைத்த நிபந்தனையால் குஷியானேன்” ; ஆதிக் ரவிச்சந்திரன்

மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா மற்றும் சுனில், செல்வராகவன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

வரும் செப்-15ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் செப்-22ஆம் தேதி ஹிந்தியிலும் இந்தப்படம் ரிலீசாகிறது. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப்படத்தை ஹிந்தியில் வெளியிடுகிறது. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கிரீன் பார்க் ஹோட்டல் புல்வெளி அரங்கில்  (செப்-3) மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் பேசும்போது, “இதற்கு முன் தயாரித்த படங்களின் பைனல் கன்டென்ட் பார்த்து வந்த நம்பிக்கையை விட இந்த படத்தில் கிடைத்த நம்பிக்கை லெவல் அதிகமாக இருக்கிறது. இதற்கு முன் மற்றவர்கள் பார்த்துவிட்டு படம் நல்லா இருக்கு என்று சொன்னதை விட இப்போது நானே அதை உணர்கிறேன் என்பதால் ஒரு ஸ்பெஷல் எனர்ஜி கிடைத்தது போல இருக்கிறது. நான்கு வருடங்களாக தொடர்ந்து படம் தயாரித்து வருகிறேன். சில படங்கள் கை கொடுக்கும்.. சில படங்கள் சரியாகப் போகாது.. ஆனால் இதற்கான பாதிப்பு எல்லாமே தயாரிப்பாளருக்கு தான். சோசியல் மீடியாவில் யார் என்றே முகம் தெரியாத பலர் படத்திற்கு எதிரான கருத்துக்களை கூறி அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெற்றி என்பது ரொம்பவே முக்கியமாகிறது. ஒரு நடிகருக்கு இயக்குநருக்கு எந்த அளவுக்கு வெற்றி முக்கியமோ அதேபோலத்தான் தயாரிப்பாளருக்கும் வெற்றி முக்கியமானது. கடந்த நான்கு வருடங்களில் எனக்கு வெற்றி தோல்வி என ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. எனது நண்பர்கள் இந்த நான்கு வருடமும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்” என்றார்.

இந்தப்படத்தில் அதிருது என்கிற அதிரடி பாடலை பாடியுள்ள இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் பேசும்போது, “எப்போதுமே எஸ்.ஜே சூர்யா பல வருடங்களாக தனது பட விழாக்களில் என்னை அழைத்து மேடை ஏற்றி கௌரவித்து வருகிறார். இந்த பட விழாவிற்கும் அவர் என்னை அழைத்திருந்தார். சமீப காலமாக நான் எந்த இசை வெளியீட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை அதே சமயம் விஷால் நீங்கள் வரவேண்டும் என்று பலமுறை அழைத்ததாக என்னிடம் கூறினார்கள். விஷாலே அழைத்தாரா என்று ஆச்சரியப்பட்டேன். அதேசமயம் இந்த படத்தில் அனைவரும் விரும்பி என்னை ஒரு பாடலை பாட அழைத்துள்ளார்கள். அதனால் இந்த விழாவிற்கு செல்வது தான் சரியாக இருக்கும் என வந்துவிட்டேன். அதுமட்டுமல்ல இந்த விழா நடக்கும் இடம் என்னை திரையுலகில் வளர்த்து வாழ வைத்த இடம்.. இங்கே இப்போது நிற்பதை பெருமையாக உணர்கிறேன். சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே வந்துள்ளேன்.. என்னை வாழ வைத்தது இந்த சினிமா.. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்து இப்போது நன்றாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இந்த சினிமா தான்.

இந்த விழாவிற்கு வந்ததற்கு முக்கிய காரணம் விஷால் என் மீது வைத்திருக்கும் மரியாதை தான்.. அவன் இவன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நான் தேனியில் சென்று படம் பார்த்தபோது என்னை வரவேற்றவர் விஷால். என் மீது அவருக்கு எப்போதுமே தனி மரியாதை, அபிமானம் உண்டு. இந்த இளைஞர்கள் கூட்டத்துடன் சேர்ந்து நானும் ஒரு பாடல் பாடி இருக்கிறேன் என்று நினைக்கும் போது இன்னும் பத்து வயது இளையவனாக உணர்கிறேன். ராமர் பாலம் கட்டும்போது அணில் ஒரு சிறிய கல் எடுத்துப் போட்டு உதவியது போல இந்த படத்திற்கு நான் சொல் எடுத்து போட்டு உதவியிருக்கிறேன். அவ்வளவுதான்..

நான் புகை பிடிக்கமாட்டேன், மது அருந்த மாட்டேன், தினசரி நடை பயிற்சி இசை என பரபரப்பாகவே இருப்பேன்.. ஆனால் அப்படிப்பட்ட எனக்கே இதயத்தில் ஒரு சிறு அடைப்பு வந்து விட்டது. அதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்று மருத்துவர் கூறினார் அப்படி இளைஞர்கள் இன்று அந்த மன அழுத்தத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்றால் சினிமா போன்ற பொழுதுபோக்கு விஷயங்கள் அவசியம். தெலுங்கில் இந்த பாடலை விஷால் பாடியுள்ளார்.. தெலுங்கிலும் என்னை கேட்டிருந்தால் நானே பாடியிருப்பேன்.. ஆனால் அவர் பாடியது நன்றாக இருக்கிறது” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஆர்யா பேசும்போது, “நடிகர் சங்கத்தில் பிரச்சனை இருந்தபோதும், அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை இருந்தபோதும் துணிச்சலுடன் களமிறங்கி போட்டியிட்டு ஜெயித்தவர் விஷால். அதன்பிறகு தேர்தலிலும் கூட இன்று மக்களுக்கு பிரச்சினைக்காக போராட போகிறேன் என இறங்கியவர். அவர் எப்போதுமே அப்படித்தான்.. யாருக்காவது உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர்.. சொல்ல போனால் நாட்டில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்பும் கதாபாத்திரத்தை சினிமாவில் பார்ப்போமே, நிஜத்திலும் அப்படிப்பட்ட ஒரு நபர்தான் விஷால்.. நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்து அங்கே உள்ள திருமண மண்டபத்தில் விஷாலின் திருமணம் நடக்கும்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத், இந்த நான்கு வருடங்களில் இன்றைக்கு தான் அவ்வளவு சந்தோஷமாக பேசி நான் பார்க்கிறேன். எஸ்.ஜே சூர்யா படம் இயக்கி வந்த சமயத்திலேயே அவரிடம் வாய்ப்பு தேடி சென்று இருக்கிறேன். இப்பொழுது நான் நடிக்கும் படங்களில் நல்ல கதாபாத்திரங்களை எஸ்.ஜே சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனரும் நானும் விரும்பும்போது அவரிடம் சென்று பேசுமாறு கூறி அனுப்பி உள்ளேன். ஆனால் அவர் படத்தின் பட்ஜெட்டையே சம்பளமாக கேட்கிறார் என பலரும் திரும்பி வந்து விடுகிறார்கள். அதனால் அடுத்து ஒரு படம் செய்யும்போது கொஞ்சம் டிஸ்கவுண்ட் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த அளவிற்கு ஒரு படத்தில் அவர் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். சில விஷயங்கள் உண்மையிலேயே விலை உயர்ந்தவை தான்.. அதற்கு எஸ்.ஜே சூர்யா தகுதியானவர்தான்” என்றார்

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, “இந்த படத்திற்காக பாடல் உருவாக்கத்தின்போது ஜி.வி பிரகாஷ் அற்புதமான ஒரு டியூன் ஒன்றைக் கொடுத்து விட்டார். இதை யாரை வைத்து பாட வைக்கலாம் என நினைத்தபோது நாங்கள் இருவரும் ஒரு பெயரை மனதில் நினைத்துக் கொண்டு அதை விஷாலிடம் சொல்லாமல் அவருக்கு டியூனை அனுப்பி வைத்தோம்.. அதை அவர் கேட்டு விட்டு ரொம்பவே உற்சாகமாகி, இவரை பாட வைத்தால் நன்றாக இருக்கும் என ஒரு பெயரை சொன்னார். அப்படி நாங்கள் மூன்று பேருமே நினைத்த ஒரே நபர் டி ராஜேந்தர் தான்.. ஆனால் அவர் பாடுவாரா அதுவும் எங்கள் படத்திற்கு பாடுவாரா என்கிற சந்தேகம் இருந்தது.. ஆனால் கேட்டதும் ஒப்புக்கொண்டு பாடினார். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனதுக்கு காரணம் டி ராஜேந்தர் தான்.

இந்த படத்தின் முதல் ஆடியன்ஸ் என்றால் அது ஜி.வி பிரகாஷ் தான். அதேபோல படத்தை முடித்ததும் தயாரிப்பாளர் வினோத்குமாரும், விஷால் அண்ணாவும் தான் சேர்ந்து பார்த்தார்கள்.. நான் அவர்களுக்கே தெரியாமல் ஓரிடத்திலிருந்து அவர்களது ரியாக்ஷனை மட்டுமே கவனித்து வந்தேன். படம் பார்த்து விட்டு வெளியே வந்து இருவருமே படம் நன்றாக இருக்கிறது பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என வாழ்த்தினார்கள்.

எஸ்.ஜே சூர்யாவை பலமுறை சந்தித்து சில கதைகள் பற்றி பேசி உள்ளேன். ஆனால் இன்னும் உன்னிடம் பெட்டராக எதிர்பார்க்கிறேன் என கூறுவார். ஒருவேளை நம்மை தவிர்க்கிறாரோ என்று கூட நினைப்பேன். இந்த படத்தில் ஜாக்கி பாண்டியன், மதன்பாண்டியன் கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைக்கலாம் என நினைத்தபோது எஸ்.ஜே சூர்யாவிடம் கதை சொல்லு என விஷால் கூறினார். ஆனால் போனில் நான் இரண்டு வரிகள் பேசி அவரது கதாபாத்திரம் பற்றி சொல்லும் போதே இது வேண்டாம் என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவரை நேரிலேயே சந்தித்து முழு கதையும் கூறினேன்.

என்னிடம் கதை கேட்க ஆரம்பித்தபோது பள்ளி வாத்தியார் போல பேப்பர், பேனா எடுத்து அமர்ந்து விட்டார். அவர் போட்ட ஒரே கண்டிஷன் இதில் விஷால் சார் இரண்டு வேடங்களில் நடிக்கிறாரே, நானும் இரண்டு வேடங்களில் நடிக்கிறேன் என்றார்.. எனக்கு இரட்டிப்பு சந்தோஷமாகி விட்டது. 15 நாட்கள் நேரம் எடுத்துக்கொண்டு அவரது கதாபாத்திரத்தை விரிவாக்கினோம். அதை இப்போது படத்தில் பார்க்கும்போது ரொம்பவே உற்சாகமாக இருக்கிறது” என்றார்

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பேசும்போது, “என் தந்தை காலத்திலிருந்தே அவரும் நானும் டி.ராஜேந்தரின் ரசிகர்கள். கீபோர்டு பிளேயராக இருந்த காலத்திலேயே அவரிடம் வாய்ப்பு தேடி சென்றுள்ளேன். அவர் பாடும் பாடல்களில் தனித்தன்மையான ஸ்டைல் மற்றும் அவருக்கென்று ஒரு தனி எனர்ஜி இருக்கிறது. ரசிகர்களின் பல்ஸ் அவருக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே சில படங்களில் எனது இசையில் அவர் பாடியுள்ளார்.

திரிஷா இல்லைனா நயன்தாரா படத்திற்கு பிறகு நானும் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த படத்தில் இணைந்துள்ளோம். அந்தப்படம் போலவே இந்தப்படமும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வெளியாவது மகிழ்ச்சி. இடையில் சில படங்களில் இணைந்து பணியாற்ற நினைத்தபோதெல்லாம் சில காரணங்களால் அவை தள்ளித்தள்ளி போனது. ஆதிக் ஒரு வழக்கமான இயக்குனர் அல்ல.. ரொம்பவே வித்தியாசமாக படம் பண்ணக்கூடியவர்.. குரு படத்தில் இளையராஜா சார் பண்ணியது போன்ற இதிலும் ஒரு ரெட்ரோ இசையை கொண்டு வர முயற்சித்து இருக்கிறோம்” என்றார்.

நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது, “டி.ராஜேந்தருக்கு இணை அவர்தான். என்னுடைய வாலி, குஷி படங்களின் இசை வெளியீட்டு விழாக்களுக்கு எல்லாம் தவறாமல் வந்து கலந்து கொண்டவர். ஏ.ஆர் ரஹ்மான் அவருடைய இசை பற்றி பேசும்போது அவரிடம் தான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார். இந்த படத்தின் கதையை ஆதிக் விரிவாக டெவலப் பண்ணிவிட்டு என்னிடம் வந்து அவர் விவரித்துக் கூறியபோது மிரண்டு போனேன். கதையை கூறி முடித்ததுமே அவரை கட்டிப்பிடித்துக் கொண்டேன். மாநாடு படத்தின் கேட்ட கதையை கேட்ட போது ஏற்பட்ட அதே உற்சாகம் இந்த மார்க் ஆண்டனி படத்தின் கதையைக் கேட்டபோதும் ஏற்பட்டது. மாநாடு பட டப்பிங்கின் போது என்னை பார்த்த விஷால் இந்த படத்தின் கதையை கேட்குமாறு வலியுறுத்தினார். நல்ல வேலையாக அன்று விஷாலுடன் சந்திப்பு நடந்ததால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல் பெற்றேன்.

இந்த படத்திற்கு தமிழில் 12 நாட்களும் தெலுங்கில் 12 நாட்களும் டப்பிங் பேசியிருக்கிறேன். விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் இந்த படம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்போது வரை தான் சொன்ன சொல்லில் உறுதியாக நின்று காப்பாற்றி இருக்கிறார்.

விஷாலை பொருத்தவரை திரையில் என்ன பேசுகிறாரோ அதையே தான் திரைக்கு வெளியிலும் பேசுபவர். அவருடன் இந்த படத்தில் நெருங்கி பணியாற்றும்போது தான் அவர் செய்துவரும் உதவிகள் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். கள்ளம் கபடம் இல்லாத, ஒளிவு மறைவு இல்லாத மனிதர் அவர். விஷால், ஆதிக் இருவரும் இணைந்து பணியாற்றியதை பார்க்கும்போது வாலி படத்தில் நானும் அஜித்தும் எப்படி இருந்தோமோ அதேபோல உணர்ந்தேன். மார்க் ஆண்டனி நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும்” என்றார்.

நாயகன் விஷால் பேசும்போது, ‘சிறுவயதிலிருந்தே டி.ராஜேந்தரின் படங்களின் ரசிகன் நான். அவரை இரண்டு விஷயங்களுக்காக எனக்கு பிடிக்கும். இந்த படத்தில் டி.ஆர் பாடியுள்ளது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். ஆனால் அந்த பாடல் பதிவின்போது நான் இல்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. அவரை வீட்டிற்கே சென்று நேரில் சந்திக்க வேண்டும் என நினைத்தேன். இந்த விழாவில் அவர் கலந்து கொண்டது மகிழ்ச்சி. இந்த டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தான் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் கடைசி ஆயுதமாக பயன்படுத்துகிறோம்.

செப்-15ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் செப்டம்பர் 22ஆம் தேதி ஹிந்தியிலும் வெளியிடுகிறோம். ஹிந்தியில் இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறார்கள். இந்த படத்தை நான் ஒப்புக்கொண்ட நாளிலிருந்து பல பேர் ஏன் ஆதிக்குடன் இணைந்து படம் பண்ணுகிறீர்கள், அவருடைய கடந்தகால படங்களை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்கள்.. நான் என்னுடைய கடந்த காலத்தையே பார்க்க மாட்டேன்.. அதேபோலத்தான் இன்னொருத்தருடைய கடந்த காலத்தையும் நான் பார்க்க விரும்ப மாட்டேன். ஏழு வருடங்களாக ஆதிக் என்னை இந்த படத்திற்காக பின் தொடர்ந்திருக்கிறார்.

ஜி.வி டார்லிங் எட்டு வருடம் கழித்து என்னுடன் இணைந்துள்ளார். என்னை நகரத்திலிருந்து கிராமத்திற்கும் அழைத்துச் சென்றவர் ஜி.வி பிரகாஷ் எனிமியில் டும் டும் பாடல் எப்படி ரீச் ஆனதோ, அதேபோல இந்த படத்தில் ஐ லவ் யூ டி பாடல் ரீச் ஆகும் என ஆதிக்கிடம் கூறினேன். ஒரு படத்தின் கதையை ரசித்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை இந்த காலத்தில் மிக குறைவுதான். ஆனால் அப்படி ஒரு தயாரிப்பாளராக வினோத் எங்களுக்கு வரமாக கிடைத்துள்ளார்.

படத்தில் ஒன்பது சண்டை காட்சிகள் இருக்கின்றன.. பீட்டர் ஹெய்ன், கனல் கண்ணன் உள்ளிட்ட ஐந்து ஜாம்பவான் சண்டை பயிற்சி இயக்குனர்கள் பணியாற்றியுள்ளனர். பெரும்பாலும் நான் சண்டைக் காட்சிக்கு ரிகர்சல் பண்ணியது குறைவு தான். ஆனால் இந்த படத்தில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் முதல் மற்றும் கிளைமாக்ஸ் என இரண்டு சண்டைக் காட்சிகளையும் அற்புதமாக உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலம் எஸ்.ஜே சூர்யாவை எனது அண்ணனாக வீட்டிற்கு கொண்டு செல்கிறேன். ஒருவர் வில்லனாக நடிப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அதில் நகைச்சுவையை கொண்டு வருவது என்பது எளிதானது அல்ல. அது எஸ்.ஜே சூர்யாவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. நான் ஹீரோயினை விட எஸ்.ஜே சூர்யாவை தான் அதிகமாக சைட் அடித்திருக்கிறேன்.. இதை அவரிடமே கூறினேன்.

நடிகர் சுனிலை தூரத்தில் இருந்தே பார்த்து வந்தேன். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபிநயாவின் திறமை அர்ப்பணிப்பு எல்லாமே எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.. இயக்குநர் செல்வராகவனும் இந்த படத்தில் நடித்துள்ளார். இப்போதெல்லாம் இயக்குனர்களே இல்லை.. எல்லோரும் நடிகர்களாகி விட்டார்கள்.. நாங்கள் தான் இப்பொழுது இயக்குனராக மாற வேண்டிய சூழல் வந்து விட்டது..

எனக்கு ஃபிட்னஸ் பொறுத்தவரை வாழ்க்கையில் இரண்டு பேர் இன்ஸ்பிரேஷன் ஒன்று எனது தந்தை. இன்னொன்று ஆர்யா. இருவருமே ஜிம்மிற்கு பணம் கட்டாமல் ஒர்க் அவுட் பண்ணி பழகிய காலத்தில் இருந்தே நண்பர்கள். எனக்கு கிடைத்த மூன்று நண்பர்களில் கார்த்தி ஒரு பொக்கிஷம். எல்லோரும் நடிகர் சங்கம் என்றால் விஷால் என்று தான் கூறுகிறார்கள் ஆனால் நான் இல்லை கார்த்தி தான் எல்லாமே.. நான் ஒரு அணில் போலத்தான் இருக்கிறேன்” என்று கூறினார்

Share this:

Exit mobile version