விடுதலை சிறுத்தைகளிடம் ஏது இவ்வளவு பணம்? மலைப்பில் திமுக‌

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளைப் பெற்று பிரச்சாரங்களில் பிஸியாக உள்ள நிலையில், அக்கட்சியின் மாநில நிர்வாகி தங்கதுரையின் காரில் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் செலவுக்கே பணம் இல்லை என்று சொல்லிய விசிகவுக்காக திமுக செலவு செய்து வரும் நிலையில், இவ்வளவு பணம் விசிக பிரமுகரிடமிருந்து கைப்பற்றப்பட்டது திமுகவினரிடம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறதாம்.

இந்த அதிர்ச்சி போதாதென்று, திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ராஜாவின் ரியல் எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள அலுவலகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, ரியல் எஸ்டேட் வரவு செலவு கணக்குகள் மற்றும் நிலம் சம்பந்தமான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சோதனை விவரம் குறித்து வருமான வரித்துறையினர் அதிகாரபூர்வ தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும், இவ்வளவு வசதியான விசிகவுக்கு நாம் ஏன் செலவு செய்ய வேண்டும் என்று திமுக பிரமுகர்கள் புலம்புகிறார்களாம். கட்சித் தலைமையின் கவனத்துக்கும் இதை கொண்டு சென்றுள்ளார்களாம்.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுதவிர, வருமான வரித்துறையும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் வருமான வரித்துறையினை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்துவோம் எனக் கூறப்பட்டுள்ளது.

“மத்திய அரசு வரிவிதிப்புத் திட்டங்களில் பெரும்பாலும் மக்களை அச்சுறுத்தும் அலைக்கழிக்கும் துறை வருமான வரித் துறை ஆகும். இந்த வருமான வரித் துறையினால் அரசுக்கு வருகின்ற வருமானம் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே. இந்த 6 சதவிகித வருமானம் பெரும்பாலும் வருமான வரித் துறை அலுவலகப் பணிக்காகவும் சம்பளத்துக்காகவும் செலவிடப்படுகிறது.

எனவே, இந்த வரிவிதிப்பு அமைப்பினால் பெரும் பொருளாதாரப் பயன் ஏதும் நிலவவில்லை. மாறாக தனிநபர் ஊழல்களுக்கு மட்டுமே அது வழி வகுத்துள்ளது. அதனால், வருமான வரித் துறையில் பெரும் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்ற அதே நேரத்தில், வருமான வரித் துறையை முழுமையாக ரத்து செய்வது நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்தரும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்”, என தெரிவித்துள்ளது.