தங்க தமிழ்செல்வன் தடம் மாறியது எப்படி? எடப்பாடியின் கேம்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு என்ட் கார்டு போடுவதில் குறியாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமமுகவின் தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியின் பல முக்கியஸ்தர்கள் அதிமுகவில் சேர்ந்து வரும் நிலையில், தற்போது டிடிவியின் தளபதியான தங்க தமிழ்செல்வனும் ஆளும் கட்சியில் இணையும் முடிவில் இருக்கிறார்.

முன்னாள் அமைச்சரான தங்க தமிழ்செல்வன் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் ஆனார். ஆண்டிப்பட்டி தொகுதி எம் எல் ஏவாக வெற்றி பெற்ற இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்தார். தாங்களே உண்மையான அதிமுக. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியை விட்டே வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதிமுகவுடன் இணைய வேண்டுமானால் எடப்பாடி, ஓபிஎஸை நீக்கி விட்டு ஒன்று சேரலாம் என்றெல்லாம் தினகரனை விட கடுமையாக வசைபாடி வந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தினகரனின் அமமுகவை மக்கள் ஏற்கவில்லை என்று கூறினார். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காகவே கட்சி ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் நாங்கள் தனி சின்னம் பெற்று போட்டியிட்டதை ஏற்கவில்லை என்றும் கூறினார்.

தேனி தொகுதியை பொறுத்தவரை தேர்தல் மின்னணு இயந்திரத்தில் எந்த பிரச்னையும் இல்லை சரியாக தான் இருந்தது என்று தெரிவித்தார்.எடப்பாடி பழனிச்சாமி அரசை வழக்கமாக எதிர்க்கும் தங்க தமிழ்ச்செல்வன் அந்த பேட்டியில் பாராட்டி எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அதிமுக அரசு பிளாஸ்டிக்கை ஒழித்தது ரொம்ப புடிக்கும் என்று கூறினார். தங்க தமிழ்ச்செல்வனின் இந்த பேட்டியின் மூலம் விரைவில் அதிமுகவில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது எப்படி சாத்தியம் என விசாரித்தபோது, தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்ய சபா எம் பி பதவி கூட கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

இதற்கிடையே, தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் தாய் உள்ளத்தோடு ஏற்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். “பிரிந்தவர்கள் இணைவது வழக்கம். ஏற்கனவே அ.தி.மு.க. வில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவது என்றால் அது அவரது விருப்பம். அவரை தாய் உள்ளத்தோடு ஏற்போம். அவர் மட்டுமின்றி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் இணைந்தாலும் ஏற்றுக்கொள்வோம்.

சசிகலா, தினகரன் இருவரும் தலைமை தாங்கி தனியாக இயக்கத்தினை தொடங்கியவர்கள். மற்றவர்கள் அப்படி இல்லை. இயக்கத்தினை தொடங்கியவர்களுக்கும், இணைந்தவர்களுக்கும் வேறுபாடு உண்டு. அங்கு சென்றவர்கள் திரும்பி வருகின்றனர். அவர்களை நாங்கள் தாய் உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.