அதிமுக அணியில் தேமுதிக: விஜயகாந்த் & கோ வழிக்கு வந்தது எப்படி?

நாம் ஏற்கனவே சொல்லி இருந்தது போல், அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக நேற்று இணைந்தது. ஆனால், நட்சத்திர ஹோட்டலில் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு முன் திரைமறைவில் பல விஷயங்கள் நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பம் முதலே பாமகவுக்கு இணையாக சீட்டுகள் டிமேன்ட் செய்த தேமுதிக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பங்கேற்ற பொதுக்கூட்டத்தையும் புறக்கணிச்சது. செல்வாக்கு குறைஞ்சதும், திமுக கூட பேரம் பேசியதும் வெட்ட வெளிச்சமானதால, அதிமுக கூட்டணியில சேருவது தவிர வேறு வழியில்லைன்ற நிலைமைக்கு வந்த தேமுதிக, 4 தொகுதிகளுக்கு ஒத்துகிச்சாம்.

ஆனால், ‘தேர்தல் செலவுக்கு’ கூடுதல் பணமும், உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட்டுகளும் தருவதாக அதிமுக தலைமை உறுதி அளிச்சதாம். இதைத் தொடர்ந்தே கேப்டன் முன்னிலையில நேற்று இரவு ஒப்பந்தம் கையெழுத்தாச்சாம். தேமுதிக கூட்டணிக்கு வரணும்ன்றதுல பாஜக உறுதியா இருந்ததால, அதிமுக கூடுதல் சல்லுகைகள் கொடுத்ததாம்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதனுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலிலும், மற்ற கூட்டணி கட்சிகள் போலவே, தேமுதிக அதிமுகவுக்கு ஆதரவு அளிச்சு இருக்கு.

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “கடந்த முறை எனது பேட்டி திரிக்கப்பட்டது. அம்மா-கேப்டன் அமைத்த கூட்டணி போன்று வெற்றிக் கூட்டணியாக இது அமையும். அடுத்து வருகிற 21 தொகுதி இடைத்தேர்தல், பின்னர் வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம்”, என்றார்.

கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்து இட்டனர். தேமுதிக.வுக்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக பிரஸ்மீட்டில் அறிவித்தார்.

நேற்று மாலை தங்கள் கூட்டணி குறித்து முடிவெடுக்க, தேமுதிக மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடந்தது. இதைத் தொடர்ந்து அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.