அவர் தான் வேணும், அடம் பிடிக்கும் நடிகை

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி பாம்ப் படத்தின் மூலம் இயக்குனராக பாலவுட்டில் கால் பதித்த ராகவா லாரன்ஸ், சமீபத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து பட குழுவினரும், படத்தின் நாயகன் அக்‌‌ஷய் குமாரும் லாரன்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அந்த‌ படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி, “அவர் மறுபடியும் இப்படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன். அவரும் அப்படியே சம்மதித்தார். அவரே இப்படத்தை இயக்க மிக சிறந்த நபர்.

ஏனென்றால் அவர் இப்படத்தின் ஒரு பகுதியை இயக்கி முடித்து விட்டார். மீதியை யார் இயக்கினாலும் அது சரியாக இருக்காது. மேலும் லாரன்ஸ் மாஸ்டர் ஆச்சர்யம் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர். இப்படத்தை தமிழில் அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார்,” என்று கூறியுள்ளார்.

அதோடு நிற்காமல், “மக்களும் படத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆக இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவரது விலை மதிப்பில்லா சொத்து என்று தான் சொல்ல வேண்டும். இப்போது நாங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்,” என்றும் கூறியுள்ளார்.

8 வருடங்களுக்குப் பிறகு காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். லக்‌ஷ்மி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கியாரா அத்வானி ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 18-ம் தேதி வெளியானது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இயக்குநர் ராகவா லாரன்சின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து இயக்குநர் ராகவா லாரன்ஸ், “இந்த உலகத்தில் பணத்தை விட மரியாதை தான் முக்கியம், அதானல் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகுகிறேன். படத்தில் இருந்து விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதை சொல்ல விரும்பவில்லை,” என்றார்.

பின்னர் சமாதானமடைந்த அவர், “நான் லக்‌ஷ்மி பாம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளேன். என்னுடைய மன வேதனையை புரிந்து கொண்டதற்காகவும் பிரச்னைகளை தீர்த்து வைத்தற்காகவும் நடிகர் அக்‌ஷய்குமார் மற்றும் தயரிப்பாளருக்கு நன்றி. படத்தின் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது, என்றார்.