கலக்கும் கல்வித் துறை, கதறும் தனியார் பள்ளிகள்: செம்ம மாஸ் செங்கோட்டையன்

தமிழக அரசின் துறைகளிலேயே சிறப்பாக செயல்படும் துறை எதுவென்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பலர் சொல்வது கல்வித் துறை. அதுவும் அமைச்சர் செங்கோட்டையன் கவனிக்கும் பள்ளிக் கல்வித்துறை.

தன் துறையில் பல்வேறு அதிரடி மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கும் அமைச்சர், தவறிழைக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்கிறார். இதனால், அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

“பிளஸ்-2 ரிசல்ட்டின் போது முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் முறைகளை மாற்றினார்கள். இதுதான் தனியார் பள்ளிகளுக்கு விழுந்த முதல் அடி, இரண்டாவதாக 11ம் வகுப்புக்கும் அரசு பொதுத் தேர்வு என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்துவிட்டது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி கொங்கு மண்டலம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இதனால் தனியார் பள்ளி முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைச்சரைச் சரிக்கட்ட சென்னைக்கு பயணமாகினர். அமைச்சரையும் சந்தித்தனர். அப்போது உங்களது இந்த அறிவிப்புகளால் எங்கள் பிழைப்புக்கு பாதிப்பு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான எதிர் கால நலத் திட்டம், இந்தத் திட்டங்களில் இருந்து யாருக்காகவும் அரசு பின்வாங்காது என்று கறாராகத் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பு பாடங்களை நடத்துவது கிடையாதாம். 9ம் வகுப்பிலேயே, 10ம் வகுப்பு பாடங்களை நடத்துமாம். அப்படி இரண்டு வருடமாக 10ம் வகுப்பு பாடங்கள் நடத்தும் போது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.

அதுபோல பிளஸ் 1, வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்துவதுதான் வழக்கமாம். இதுவும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

அரசுப் பள்ளிகளில் நீட், உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிக்கு சற்றும் குறையாத அளவு அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே இலட்சிமாக அமைச்சர் செங்கோட்டையன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது. இதனால் தனியார் பள்ளிகளின் முதலாளிகள், விரைவில் தலையில் துண்டு போடும் நிலை உருவாகும் எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.”

இப்படியெல்லாம் சோசியல் மீடியாவில் புகழாரம் சூட்டப்படுகிறடு. இந்நிலையில் செங்கோட்டையன் ஒரு மிக முக்கிய முடிவை சீக்கிரம் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.