புதுச்சேரி சட்டமன்றத்தில் முதன் முறையாக திரைத்துறையைச் சேர்ந்தவர் அமைச்சராக பதவியேற்றுள்ளார்

புதுச்சேரி சட்டமன்றத்தில் முதன் முறையாக திரைத்துறையைச் சேர்ந்தவர் அமைச்சராக பதவியேற்றுள்ளதற்கு கலைஞர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் திரைப்பட படப்பிடிப்புக்கு சிறந்த தலமாக விளங்கி வருகிறது. நேர்த்தியான வீதிகள், அழகான கடற்கரை படப்பிடிப்புக்கு சிறந்த இடமாக விளங்குகின்றன. 
.
மேலும் புதுச்சேரியில் தயாரிக்கப்படும் குறும்படங்கள் சர்வதேச அளவில் விருதுகளையும் குவித்து வருகின்றன. கடந்த வருடம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தயாரிக்கப்பட்ட ‘ஜான்சி’ என்ற குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியையாக நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் சந்திரப்பிரியங்கா நடித்தார். 
.
மேலும், மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயலும் உடற்பயிற்சி ஆசிரியரின் தவறினைக் கண்டுபிடிக்கும் முக்கிய கதாபாத்திரமாகவும் இப்படத்தில் பிரகாசித்தார். 
.
இந்த திரைப்படம் உலகம் முழுக்க பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களின் பாராட்டினைப் பெற்றது. இந்தியாவின் பல்வேறு சமூக அமைப்புகள் சந்திரப்பிரியங்கவின் சேவையைப் பாராட்டி, விருதுகளை வழங்கியது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திரப்பிரியங்கா அமைச்சராக பதவியேற்றுள்ளார். 
.
புதுச்சேரியில் திரைத்துறை கலைஞரான சந்திரப்பிரியங்கா அமைச்சர் பதவியேற்றதற்கு, தென்னிந்திய  திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் பலரும் பாராட்டுக்கள், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

-Karai-Marimuthu