‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்

முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது.

இந்த வெற்றியை
தொடர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்திற்கு இன்று சென்ற ராகவா லாரன்ஸ், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், மற்றும் கலை இயக்குநர் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு வசிக்கும் சுமார் 300 மூத்த குடிமக்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். ‘ருத்ரன்’ திரைப்படத்தின் வெற்றியை அங்குள்ளவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியின் போது பேசிய ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார், ருத்ரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு திரைப்படத்தின் வெற்றியை இதுபோன்று பயனுள்ள முறையில் கொண்டாடுவது மிகுந்த மன மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக கூறினர்.

இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பது தான் என்பதால் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுடன் திரைப்பட வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

‘காஞ்சனா’ வெற்றிக்குப் பின்னர் 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் இணைந்து ‘ருத்ரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் தவிர, பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த பொழுதுபோக்கு கதையான‌ ‘ருத்ரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பையும், ராஜு கலை இயக்கத்தையும், சிவா-விக்கி சண்டைக்காட்சிகளையும் கையாண்டுள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதையை கே.பி.திருமாறன் எழுதியுள்ளார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Share this:

Exit mobile version