அமைச்சர்களுடன் ஆலோசனை, இப்தார் விருந்தில் ஆப்சென்ட்: வலுக்கிறதா ஈபிஎஸ்‍, ஓபிஎஸ் சண்டை?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள்-எம் எல் ஏக்களுடன் நேற்று திடீர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், அதிமுக சார்பில் மாலையில் நடைபெற்ற‌ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றவில்லை.

இது போதாதா எதிர்கட்சியினருக்கு! மத்திய அரசில் மந்திரி பதவி வாங்குவதில் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் ஏற்பட்ட லடாய் வலுத்ததால் தான் ஈபிஎஸ் இப்படியெல்லாம் செய்கிறார் என்று அவர்கள் கொளுத்தி போட, அதிமுகவினரோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அடித்து சொல்கின்றனர்.

‘அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது ஒரு முதல்வராய் அவரது தினசரி க‌டமை. இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை,” என்று கூறுகின்றனர்.

இப்தார் நிகழ்ச்சியில் பேசிய பன்னீர் ஏகப்பட்ட பன்ச்சுகளை அடித்தார். “பொய்யைக் கூட உண்மை என்று நம்பி விடுகின்ற வேதனையான விஷயம் சில நேரங்களில் நடந்து விடுகிறது. பாலைவனத்தில் கடும் வெயிலில், தாகத்தோடு நடப்பவர்களுக்கு தூரத்தில் தண்ணீர் இருப்பது போல தெரியும். அங்கே போனால் தண்ணீர் கிடைக்கும் தாகம் தீரும் என்று நம்பி போவார்கள். ஆனால் அங்கே சென்ற பிறகுதான் தெரியும். அங்கே நீர் இல்லை. அவர்கள் கண்ணுக்கு தெரிந்தது. வெறும் கானல் நீர் என்று.

என்றுமே தாகம் தீர்க்கும் தண்ணீர், அ.தி.மு.க. என்று தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை, 9 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் என்றுமே ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் திண்ணமான எண்ணம்.

தமிழ்நாட்டை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏமாற்றுகிறவர்கள் எப்பொழுதும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு, ஆனால், ஏமாறுகிறவர்கள் எப்பொழுதுமே ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் வழியில் சிறுபான்மையின மக்களின் தோழர்களாய் உங்களுடனே இருப்போம். உங்களுக்குத் தோள் கொடுப்போம். உங்களில் ஒருவராகவே வாழ்வோம்,” என்று அவர் பேசினார்.

மேலும் அவர், “ஒருவர், தான் ஈட்டுகின்ற லாபத்திற்கு ஏற்ப ஏழை மக்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. சுருக்கமாகச் சொன்னால் ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னது இஸ்லாம். ஜெயலலிதாவும் அதைத்தான் சொன்னார், அதைத்தான் செய்தார்.

இஸ்லாமிய சமூகம் மேம்பாடு காண ஏராளமான நன்மைகளைச் செய்த ஜெயலலிதா வழியில், அவர் விட்டுச் சென்ற பணிகளைத்தான் நாமும் செய்து கொண்டிருக்கிறோம். இஸ்லாமியர்களை நேசிப்பதில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு நிகரே இல்லை,” என்று பேசினார்.