“ஃபெமினிஸ்ட்” குறும்பட விமர்சனம்

இலக்கிய ஆர்வம் கொண்ட இளம்பெண் கதை, கவிதை எழுதுவதில் நிபுணை. அவளது படைப்புகளால் ஈர்க்கப்பட்ட இளைஞன் அவளை பின்தொடர்ந்து, ஒரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். இதனால் அறிமுகம் நட்பாக மாறுகிறது.

இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக முழு அடைப்பு அறிவிக்கப்படுகிறது. ஊருக்குச் செல்ல முடியாததால், அந்த பெண் இளைஞனுடன் ஒரே வீட்டில் தங்க நேர்கிறது. கவிஞர்-ரசிகன் உறவு, நட்பை தாண்டி ஈர்ப்பாக மாறுகிறது. இருவரும் உடலால் ஒன்றிணைந்து, திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார்கள்.

காதல், ஊடல் என மகிழ்ச்சியுடன் நாட்கள் கழிகின்றன. ஆனால், நாளடைவில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது. “நீ பெமினிஸ்ட், உனக்கு பலருடன் நெருக்கம்” என நாயகன் குற்றம் சாட்ட, இருவருக்கும் வாக்குவாதம் முற்றி பிரிகின்றனர்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

மதியழகன் மற்றும் ஏஞ்சலினா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இளைஞர்களின் மனதை திறமையாக காட்டியுள்ள இயக்குநர் கேபிள் சங்கர், இரண்டு கதாபாத்திரங்களின் உணர்வுகளை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் பெண்ணியவாதத்தை ஆணின் பார்வையிலும், பெண்ணின் பார்வையிலும் அழகாக எடுத்துரைக்கிறார்.

ஷமந்த் நாக் இசை, முரளி ஸ்ரீதரின் கேமரா, அபிஷேக் க்ரீம் எடிட்டிங் ஆகியவை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன.

மொத்தத்தில்  நல்ல குறும்படம்.

Share this:

Exit mobile version