குடும்பத்திடம் குட்டு வாங்கிய ஸ்டாலின், கூட்டணிக்கு குட்பை?

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 38க்கு 37 தொகுதிகளை ஜெயித்ததில், மு க ஸ்டாலின் உற்சாகத்தில் இருக்க, அவரது குடும்பத்துக்கு அதில் அவ்வளவாக சந்தோஷம் இல்லையாம்.

இந்த 37இல், வெறும் 19 மட்டுமே திமுக வேட்பாளர்கள். மீதி 18 பேரும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். அதிலும் 10 பேர் காங்கிரஸ்காரர்கள். ‘கூட்டணியே இல்லாம நின்னிருந்தாலும் திமுக தான் அனைத்து தொகுதிகளிலும் ஜெயித்திருக்கும்.

ஸ்டாலின் 2014ல் ஜெயலலிதா ஃபாலோ செய்த ஃபார்முலாவை பின்பற்றி கூட்டணி இல்லாமல் திமுக சார்பாகவே அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்திருக்க வேண்டும். நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருப்போம்,’ என அவர்கள் ஆதங்கப்படுகிறார்களாம்.

இது சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓப்பனாகவே தெரிந்தது. அக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஸ்டாலின் மிகவும் தாராள குணம் கொண்டவர். அதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு வாரி வழங்கி விடுவார்.

தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில், கூட்டணி முக்கியம் என்றாலும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, வரலாற்று சாதனையை படைக்க வேண்டும்”, என்றார்.

அதோடு நில்லாமல், “உள்ளாட்சித் தேர்தலிலும் பிரசாரம் செய்ய இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் விரைவில் நடக்கவுள்ள நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வேன். அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சி, திமுக-வுக்கு கொடுக்க திருநாவுக்கரசர் பரிந்துரை செய்ய வேண்டும்,” என்றும் ஒரே போடாக போட்டார். இது திமுகவின் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பேசிய உதயநிதி, “தி.மு.க குடும்பக் கட்சி என்று அனைவரும் கூறிவருகிறார்கள். ஆம், தி.மு.க குடும்பக் கட்சிதான். அன்பில் தர்மலிங்கம் தாத்தா, மகேஷின் தாத்தா மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான்.

எனது தாத்தா கருணாநிதி, எனக்கு மட்டுமல்ல இங்குள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான். அதனால்தான் திமுக குடும்பக் கட்சி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மோடி எதிர்ப்பு அலை மட்டும் காரணமல்ல; தலைவர் ஸ்டாலின் ஆதரவு அலைதான் காரணம்,” என்றார்.