உன்னை விட மாட்டேன்: ஓபிஎஸ் மகனுக்கு எதிராக அணி சேரும் ஈவிகேஎஸ், டிடிவி

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமார் மத்திய மந்திரி ஆகப்போகிறார் என அனைவரும் சொல்லிக் கொண்டிருக்க, அவருக்கு எதிராக அவரது எதிரிகள் அணி திரள தொடங்கி இருக்கின்றனர்.

அதிலும், ரவீந்திரநாத்திடம் தேனி தொகுதியில் தோல்வியடைந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான‌ ஈவிகேஎஸ் இளங்கோவன், பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார்.

அவருடன் டிடிவி தினகரனின் அமமுகவை சேர்ந்தவரும், அக்கட்சியின் தேனி வேட்பாளரும், ஓபிஎஸ்ஸின் பரம எதிரியான தங்க தமிழ்செல்வனும் அணி சேர்வார் என்றும், இவர்கள் இருவரும் இணைந்து வழக்கு தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த இளங்கோவன், “தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. திருஷ்டி பரிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக, என்னவோ? நான் தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன்.

என்னுடைய தோல்வி உருவாக்கப்பட்டது. மக்கள் ஓட்டு போடாமல் ஏற்பட்ட தோல்வி அல்ல. அதிகார பலம், பணம் பலம் இருந்தும் கூட தேனி தொகுதியில் 4.5 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

இந்த தேர்தலில் பன்னீர்செல்வம் மகன் போட்டியிட தேனி தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் கொடுத்து தில்லுமுல்லுகளை செய்திருக்கிறது. பணம் மழையாக இல்லை, சுனாமியாக கொட்டி இருக்கிறது.

தேனி தொகுதியில் எப்படியாவது பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருந்தார். தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், சி பி ராதாகிருஷ்ணன், எச் ராஜா ஆகியோர் மீது இல்லாத காதல், பன்னீர்செல்வத்தின் மகன் மீது மட்டும் மோடிக்கு இருந்தது ஏன்? என்று தெரியவில்லை.

தில்லுமுல்லுகள் செய்தாலும் கூட தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் நான் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறேன். தேனி தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

தேனி தொகுதியில் வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று வழக்கில் குறிப்பிடுவேன். வாக்குப்பதிவு எந்திரங்களை விட வாக்குச்சீட்டு முறை தான் சிறந்தது என்று நாங்கள் வலியுறுத்துவோம்,” என்று கூறினார்.