முதல்வர் ஏரியாவில் என்கவுன்டர்: நடந்தது என்ன?

ஒரு இடைவேளைக்கு பிறகு தமிழகத்தில் மறுபடியும் ஒரு என்கவுன்டர் நடந்தேறி உள்ளது. அதுவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஊரான சேலத்தில். மாம்பழ மாநகரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் நேற்று போலிசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவுடி கதிர்வேல், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், சேலம் காரிபட்டி அருகே கதிர்வேல் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கே விரைந்தனர். கதிர்வேலை, போலீசார் பிடிக்க முயன்ற போது, கதிர்வேல், போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் காயமடைந்தனர்.

இதனையடுத்து நடந்த என்கவுன்டர் தாக்குதலில், ரவுடி கதிர்வேல் சுட்டுக்கொல்லப்பட்டார். கதிர்வேல் போலிசார் மீது தாக்குதல் நடத்தியதாலேயே என்கவுன்டர் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.”

நாம் இது குறித்து விசாரித்த போது தெரிய வந்தது என்னவென்றால், சேலம் மாநகரில் சமீபகாலமாக வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ரவுடிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ரவுடிகள் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன.

இதனால் அவர்களின் அட்டகாசத்தை தடுக்கவும், பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் வகையிலும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் ஒரு பகுதியாகவே கதிர்வேல் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்த என்கவுன்டர் சேலத்தில் நடக்கவில்லை. திருவண்ணாமலையில் நடந்ததாகவும், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வில்லை. திட்டமிட்டே செய்துள்ளதாகவும், கதிர்வேல் திருமணமாகாத சின்ன பையன். அவனுக்கு வயது 27 இருக்கும். காவல்துறையைத் திருப்பி தாக்கும் அளவுக்குப் பெரிய அளவுக்கு ரவுடி கிடையாது எனவும் முதலில் காலில் சுடாமல் நெஞ்சில் சுட்டதன் காரணம் என்ன, என்கவுன்டர் செய்யப்பட்ட கதிர்வேல் திமுக-வை சேர்ந்தவர் எனப் பல தகவல்கள் பரவலாக உலா வருகின்றன.