Durai Murugan's smart tactics leave DMDK in worry

தேம்பும் தேமுதிக, துரை முருகனின் தில்லுக்கு துட்டு

கருணாநிதி கிட்டக் கத்துக்கிட்ட மொத்த வித்தையில கொஞ்சம் துரைமுருகன் நேற்று இறக்கி விட்டதுல, தேமுதிகவின் டோட்டல் இமேஜ் டேமேஜ். ஒரே சமயத்துல அதிமுககிட்டயும், திமுககிட்டயும் விஜயகாந்த் கட்சி பேரம் பேசுதுன்னு அவர் பிரஸ் மீட்ல சொல்ல, மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம சுதீஷ் & கோ பதட்டத்தில் இருக்குதாம்.

இனிமேல அதிமுக‍ பாஜக கூட்டணிக்கு போறதை தவிர வேற வழியில்லைன்ற முடிவுக்கு வந்துள்ள பிரேமலதாவும், சுதீஷும், கொடுக்கறதை வாங்கிக்கிற மனநிலைக்கும் வந்துட்டாங்களாம். இதுக்கெல்லாம் காரணமான துரைமுருகனுக்கு, அதிமுக தலைவர்களே மனதார நன்றி சொல்றாங்களாம்.

அதிமுக, தேமுதிக கூட்டணி இழுபறியில் இருந்து வரும் நிலையில் நாங்கள் தற்போது உங்கள் கூட்டணிக்கு வர விருப்பப்படுவதாக தேமுதிக துணைப்பொதுச்செயலாளா் சுதீஷ் கேட்டதாக திமுக பொருளாளா் துரைமுருகன் நேற்று தொிவித்தார்.

எங்கள் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுத்துவிட்ட நிலையில் தேமுதிகவின் சுதீஷ் எங்கள் கூட்டணியில் இடம் பெற விருப்பப்படுவதாக தொிவித்ததாகவும், அதற்கு எங்களிடம் சீட் இல்லை என்று தொிவித்து விட்டதாகவும் கூறியதாக துரைமுருகன் கூறினார்.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் சேராமல் மதில் மேல் பூனையாக இருந்து வருகிறது. தேமுதிக, திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கடந்த இரண்டு வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் திமுக, நேற்று முன் தினம் தொகுதிப் பங்கீட்டை மொத்தமாக முடித்து விட்டது.

ஏகப்பட்ட கெடுபிடி, கண்டிஷன்கள் போட்ட தேமுதிகவை திமுக, அதிமுக கட்சிகள் கைவிட்டுவிட்டன. நிர்க்கதியாய் விஜயகாந்த் நிற்கும்போது கைகொடுக்க முன்வந்தது பாஜகதான். பாஜக மேலிட உத்தரவால் வேறு வழியில்லாமல், அரை மனசுடன் 4 சீட் தர அதிமுக முன் வந்தது. இதை அறிவிப்பதற்குள் தேமுதிக திமுக கிட்ட நடத்திய பேரத்தால, சிக்கலில் மாட்டிக்கிட்டு தவிக்குது.

“முதலில் சுதீஷ் என்னிடம் போனில் பேசினார். கூட்டணிக்கு வருகிறோம், எங்களுக்கு அதிமுக கூட்டணி வேண்டாம் என்றார். அதற்கு நான் எங்களிடம் சீட் இல்லையே, இருந்தால்தானே உங்களுக்கு கொடுப்பதற்கு? இதில் முடிவெடுக்க வேண்டியது திமுக தலைவர்தான் என்றேன். அதையே தான் இப்போது வந்த நிர்வாகிகளிடமும் கூறி அனுப்பி விட்டேன்,” என்று துரைமுருகன் போட்டு உடைத்ததால் தேமுதிக தேம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.