இரண்டாக உடையப்போகிறதா திமுக?

சமீப காலங்களில் பரபரப்புக்கு பஞ்சமே வைக்காதவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் ‘இந்து தீவிரவாதம்’ பேச்சுக்கு காட்டமான பதிலடி கொடுத்த பாலாஜி, இப்போது லேட்டஸ்ட்டாய் ஒரு வெடியை பற்ற வைத்துள்ளார்.

“வருகிற 23-ந் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையும்,” என்று கூறியுள்ள ராஜேந்திர பாலாஜி, அது எப்படி நடக்கப் போகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். இதனால், அரசியல் அரங்கில் பரப்பரப்பு கிளம்பியுள்ளது.

ஓட்டப்பிடாரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், “வருகிற 23-ந் தேதிக்கு பிறகு திமுக இரண்டாக உடையப்போகிறது. காங்கிரஸ் கட்சி உடைந்தது போன்று, திமுகவும், முன்னாள் தலைவர் கருணாநிதி காலத்தில் இருந்த 70 வயதை நெருங்கும் தலைவர் ஒரு அணியாகவும், உதயநிதி ஸ்டாலின் பின்னால் இருக்க கூடியவர்கள் மற்றொரு அணியாகவும் பிரிய போகிறார்கள்.

திமுகவில் உள்ள நல்ல மனிதர்கள் வெளியே வந்து விடுவார்கள். அல்லது மாற்று அணி உருவாக்குவார்கள். இதுதான் திமுகவின் நிலை,” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “திமுக இதுவரை நேர்மையான முறையில் ஆட்சியை கைப்பற்றவில்லை. அதிமுகவுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் குறுக்கு வழியில் ஆட்சி பிடித்தனர். மக்கள் நேர்மையான ஆட்சியை விரும்புகின்றனர்.

ஆட்சியை கைப்பற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் வசனம் எழுதி பேசிக் கொண்டு இருக்கிறார். இது சினிமா படத்துக்கு பொருந்தும். நிஜத்தில் நடப்பது இல்லை. எடப்பாடியார் ஆட்சி நிம்மதியாக கம்பீரமாக நடைபெறும். எனவே, எடப்பாடியார் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய ராஜேந்திர பாலாஜியி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் காந்தி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதை பற்றி கருத்து கூறிய அமைச்சர், “மதக்கலவரங்கள் குறைந்து இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமல்ஹாசனின் பேச்சு இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலையாகத் தெரிந்தது. கமல்ஹாசன் யாரை திருப்திப்படுத்த இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனக் கூறினார்?

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் கமல்ஹாசன் பணம் வாங்கிக்கொண்டு பேசுகின்றாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மதவாதம் பேசுவது மதவாதத்தைத் தூண்டிவிடும். கமல்ஹாசன் பின்னணியை மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும். என்னை பதவி விலகச் சொல்லுவதற்கு கமல்ஹாசன் ஆளுநர் அல்ல. நான் எங்கும் பயங்கரவாதத்தைத் தூண்டும் வகையில் பேசவில்லை. இந்திய நாட்டின் முதல் தீவிரவாதி இந்து என்பதை கமல்ஹாசன் எப்படிச் சொல்லலாம். ஒரு மதத்தைக் கூறி தீவிரவாதம் என்று யார் சொல்வதையும் அனுமதிக்க முடியாது,” என்றார்.