தேமுதிகவின் சீக்ரெட் பிளான்: கிளைமேக்சில் களம் இறங்கப்போகும் கேப்டன்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சித் தொண்டர்களையும், வாக்காளர்களையும் கவர தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு அதிரடி திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது, பல மாதங்கள் அமைதியாகவே இருந்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், சமீபத்தில் ஒரு விடியோ வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

இப்போது, அவர் நேரில் தோன்றப் போகிறாராம். சென்னையில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் சர்ப்ரைஸாக ஆஜராகப் போகும் கேப்டன், ஒரு சில வார்த்தைகளையும் பேசுவாராம். இது கடைசி நேரத்தில் அரசியல் களத்தில் திருப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் என தேமுதிக கருதுகிறது.

இதைப் பற்றி சூசகமாக நேற்று தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து இன்னும் 2 நாளில் அறிவிப்பு வரும் என கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று உள்ளேன். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. 40 தொகுதிகளையும் வென்று எடுப்போம். கடைசியாக வடசென்னையில் பிரசாரத்தை முடிப்போம்.

கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பு. உறுதியாக 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். வருமான வரி சோதனை உள்பட பல இடங்களில் பல சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சட்டம் தனது கடமையை செய்யும். எதிர்க்கட்சிகள் என்பதால் சோதனைகள் மூலம் யாரையும் பழிவாங்கவில்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது.

என்னுடைய பிரசாரம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா இல்லாததால் எல்லோரும் என்னுடைய பிரசாரத்தை கவனிப்பதால் அவருடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

கடந்த காலத்தில் நடந்த பிரசாரங்களும் இதுபோல்தான் இருந்தன. எனக்கு என்று ஒரு பாணி உள்ளது. விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். இன்னும் 2 நாளில் அதற்கான அறிவிப்பு வரும்,” என்றார். வெல்கம் பேக், கேப்டன்.