Did Durai Murugan talk bad about DMK high command?

திமுக தலைமைப பற்றி அப்படி என்ன தவறாக பேசினார் துரைமுருகன்?

தேமுதிக பிரமுகர்கள் தன்னிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வந்தார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் போட்டு உடைத்ததால் போட்டி பிரஸ் மீட் வைத்த தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், துரைமுருகனை பற்றி கூறிய விஷயங்கள் திமுக வட்டாரங்களில பரபரப்பை கிளப்பி இருக்கு.

துரைமுருகன் தனது கட்சி தலைமை பற்றி பேசியதை அரசியல் நாகரிகம் கருதி நான் வெளியில் சொல்ல மாட்டேன் எனக் கூறிய சுதீஷ், ‘நான் துரைமுருகனுடன் பலமுறை பேசியிருக்கிறேன். இருவரும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அரசியல் மட்டுமின்றி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கிறோம்’, என்றார்.

மேலும் அவர், ‘நான் 10 நாட்களுக்கு முன்பு துரைமுருகனிடம் பேசியதை அரசியல் நாகரிகமின்றி வெளியே கூறியுள்ளார். அதன்பின்னர் அவரிடம் நான் பேசவில்லை. அதேசமயம் அவர் என்னிடம், திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் எவ்வளவோ பேசியுள்ளார். அரசியல் நாகரிகம் கருதி அதை வெளியில் சொல்ல மாட்டேன். நாங்கள் வந்த இடம் இப்படி… அவர்கள் வந்த இடம், அவர்களின் வளர்ப்பு அப்படி’, என்றார்.

இதை பற்றி, தேமுதிக தரப்பில் விசாரித்த போது, துரைமுருகன் சுதீஷிடம் தனக்கு உள்ள மனக்கசப்பை கொட்டியதாகவும், கட்சியில் ஸ்டாலின் குடும்பத்தலையீடு குறித்து மனம் விட்டு பேசியதாகவும் கூறுகின்றனர். அதை எல்லாம் நேரம் வரும் போது சுதீஷ் தரப்பு வெளியிடும்னும் சொல்றாங்க.

இதற்கிடையே நேற்று துரைமுருகன், ‘தேமுதிக நிர்வாகிகள் நொந்துபோய் இருப்பதாகவும், தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக மாற்றி பேசுவதாகவும்’ தெரிவித்தார்.

‘தேமுதிக நிர்வாகிகளுக்கு என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு எதுவும் இல்லை. நடந்த சம்பவத்தை மீடியாக்களிடம் கூறிவிட்டேன். என்னை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள் அரசியல் பேசவில்லை என்றால், உடனடியாக கூறியிருக்கலாமே. என்னிடம் பேசிவிட்டு வெளியே சென்றபோது, பத்திரிகையாளர்களை சந்தித்து அரசியல் பேசவில்லை என்று கூறியிருக்கலாமே.

நேற்று காரில் வந்துகொண்டிருந்தபோது, சுதீஷ் என்னுடன் போனில் பேசினார். இப்போது ஏன் இப்படி பேசுகிறார் என்பது தெரியவில்லை. இதன்மூலம் சுதீஷ் மீது நான் வைத்துள்ள மரியாதையை அவரே கெடுத்துள்ளார்’ என்று துரைமுருகன் கூறினார்.