சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.1.26 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்

சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் ரூ.1.26 கோடி மதிப்புள்ள 3.2 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அன்று ஜார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமானத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த அர்சாத் அகமத் (வயது 26) என்பவரை வெளியேறும் வழியில் சோதனை செய்தபோது மலக்குடலில், ரப்பர் இழையால் 3 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.11.51 லட்சம் மதிப்புள்ள 344 கிராம் தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த வியாழன் அன்று கொச்சியிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் மூலம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்த இலங்கையை சேர்ந்த முகமது அப்துல் அசீஸ் (வயது75), முகமது முஸ்தக் (வயது 25) ஆகியோரிடம் விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அளித்த தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களை சோதனை செய்தபோது முகமது அப்துல் அசீஸ் என்பவர் அந்தரங்கப் பகுதியில் ரூ.81 லட்சம் மதிப்புள்ள 2.08 கிலோ எடை கொண்ட  தங்கத்தை டேப் சுற்றிய 5 பொட்டலங்களில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கடத்தல் செய்ததை ஒப்புக் கொண்டனர்.

கடந்த வியாழன் அன்று மற்றொரு சோதனையின் போது கொழும்பிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த முகமது ரிம்ஷாட் (வயது 39), முகமது சஃபீர் (வயது 32) ஆகியோரிடமிருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள 902 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 6 ரப்பர் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தை கைப்பைகளில் எடுத்து வந்தனர். விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் சோதனையில் இது தெரிய வந்தது. காவலர்கள் கடத்தல்காரர்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது இந்தப் பொட்டலங்களை மலக்குடலில் ஒளித்து வைத்திருந்ததாகவும் பின்னர் பொதுக் கழிப்பறையில் வெளியேற்றி பைகளில் மறைத்து எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.