திமுக, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்?

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு முளைத்துள்ளது. நேற்று உச்ச நீதிமன்றம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த‌து. மேலும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக கவர்னரே முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆனால், காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தினால் இட்டுக்கட்டிய பிரச்னைகள் எழக்கூடும். 7 பேரையும் விடுவிக்கும் அமைச்சரவை தீர்மானம் மீது 8 மாதங்களாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இனி ஆளுநருக்கு எந்த தடையும் இல்லை, வேறு எந்த காரணத்தையும் சொல்ல வழியும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், 7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியிடம் கேட்டபோது, 7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டோம் என கட்சி தலைமை ஏற்கனவே சொல்லிவிட்டது, எது நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்றும் அழகிரி கூறினார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் மற்றும் அழகிரியின் இந்த கருத்துகள் இந்த விஷயத்தில் திமுக, காங்கிரஸ் ஒத்த கருத்தில் இல்லை என்பதையே காட்டுகிறது.