சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம்: வெடித்தது காங்கிரசில் மோதல்

ஒரு வழியாக நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்தது.

அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன், ‘சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு நிகழ்வு ஏற்பட்டு உள்ளது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,’ என்றார்.

மேலும் அவர், ‘காங்கிரஸ் கட்சியில் வருங்கால பிரச்சினைக்கு இது காரணமாக அமைந்துவிடுமோ? என்று தோன்றுகிறது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதை ப சிதம்பரம் தடுத்து இருக்கிறார். அமைச்சராகவும், கட்சியில் பல பொறுப்புகள் கிடைக்கவிடாமலும் எனது வளர்ச்சியை தடுத்து உள்ளார்,’ என்று திடுக் குற்றசாட்டுகளை கூறினார்.

அது மட்டுமில்லாமல், ‘நான் அவரை தேர்தலில் தோற்கடித்தேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு காங்கிரஸ் மீதும், சிவகங்கை மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சிவகங்கை மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் என்னுடைய பணியை தொடர்ந்து செய்வேன்.

சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை. பல நாடுகளில் சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்து உள்ளது. ஒரு குற்றவாளியாக உள்ளதால் கோர்ட்டில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை?.

கோர்ட்டுக்கு போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது என்பது க‌‌ஷ்டமாக உள்ளது,’ என்றும் கூறினார்.

சுதர்சன நாச்சியப்பன் மட்டுமில்லாமல், மேலும் பலரும் கார்த்தியின் மீதும் சிதம்பரத்தின் மீதும் கடுப்பில் உள்ளார்களாம். இவர்களில் சிலர் மேலிடத்துக்கும் கார்த்தி மீது புகார்களை தட்டிய வண்ணம் உள்ளார்களாம். இதனால் காங்கிரசில் விரைவிலேயே ஒரு பூகம்பம் வெடிக்குமாம்.

2014 தேர்தலில் சிதம்பரம் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டபோதும் கார்த்தி சிதம்பரம் மோசமான தோல்வியை தழுவினார். சிவகங்கை தொகுதியில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் செந்தில்நாதன் வெற்றி பெற்றார். கார்த்தி சிதம்பரத்தால் நான்காவது இடத்தைதான் பெறமுடிந்தது.