Cong gets 10 seats, how Stalin was convinced

பத்தை பறித்த காங்கிரஸ், ஸ்டாலின் காம்ப்ரமைஸ் ஆன கதை

மத்தியில் ஆளும் கட்சியா இருக்கிற பாஜகவே, தன் கன்ட்ரோல்ல இருக்காங்க என்று கூறப்பட்ட அதிமுக தலைவர்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் கிட்ட இருந்து 5 தொகுதிகளுக்கு மேல வாங்க முடியாதப்போ, இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸ், தமிழ்நாட்டுல தனக்கு சுத்தமா ஆதரவே இல்லாத போதும், திமுக கூட்டணியில 10 சீட்டு வாங்கி இருக்கு.

இது பல உடன்பிறப்புகளுக்கு ஷாக்கா இருந்தாலும், அவங்க எல்லாம் மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாம, எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி, நாளை நமதே நாற்பதும் நமதேன்னு கண்ணு வேர்க்குற அளவுக்கு கோஷம் போடறாங்க. காங்கிரஸ் இவ்வளவு தொகுதிகளை கைப்பற்றியதற்கு பின்னால ஒரு சுவாரசியமான பின்னணி இருக்குதாம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதல் முதலா பிரதமர் பதவிக்கு பரிந்துரைச்சது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான். கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கின உடனே 16 சீட்டு கேட்டு அதிர வெச்ச காங்கிரஸ், அதுக்கு அப்புறமா தான் ஒரு தூண்டில் போட்டுச்ச்சாம்.

அதாவது, தேர்தலுக்கு பின் அமைய போற காங்கிரஸ் தலைமையிலான அரசுல, திமுகவுக்கு முக்கிய துறைகள் மந்திரி சபையில‌ ஒதுக்கப்படும்னும், தேவைப்பட்டா திமுகவுக்கு துணை பிரதமர் பதவி கூட தரத் தயாரா இருப்பதாகவும் கூறப்பட்டதாம். இதை தொடர்ந்தே, திமுக தலைமை 10 தொகுதிகள் தர ஒத்துக்கிச்சாம்.

அதிமுக-பாஜக மற்றும் பாமக நடுவே நேற்று முன் தினம் ஒரே நாளில் அதிரடியாக கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டன. ஆனால் நீண்ட கால நண்பர்களான திமுக-காங்கிரஸ் இடையே இன்னும் கூட்டணி ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகாமல் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி நேற்று உறுதியான‌து. இதன்படி காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவான‌து.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கே சி வேணுகோபால் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோருடன் நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே முடிவாகியுள்ளதாகவும், அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது இனிமேல்தான் முடிவாகும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி நேற்று முன்தினமும், நேற்றும் சந்தித்து பேசினார்.