இங்கே கூட்டு, அங்கே வேட்டு: கேரளாவில் ராகுலுக்கு ஆப்பு வைக்க ரெடியாகும் கம்யூனிஸ்டுகள்

தமிழ்நாட்டில் ‘தோழர்களாய்’ இருந்து ஒரே கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் பக்கத்து மாநிலமான கேரளாவில் குடிமிப்பிடி சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து காம்ரேடுகள் செம‌ காண்டில் உள்ளார்களாம்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்-மந்திரியுமான பினராயி விஜயனே ராகுல் காந்தியை தோற்கடித்தே தீருவோம் என சபதமெடுத்துள்ளார். அவர் ராகுலை உதாசீனப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இது, தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே கடுப்பை கிளப்பி உள்ளது.

நேற்று பேசிய விஜயன், “காங்கிரஸ் தலைவர் கேரளாவில் போட்டியிடுவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இல்லை. காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களில் அவரும் ஒருவர்.

பா.ஜனதாவுடன்தான் காங்கிரசுக்கு போட்டி என்றால், பா.ஜனதாவுடன்தான் ராகுல் காந்தி மோதி இருக்க வேண்டும். கேரளாவில், இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி,” என்றார்.

மேலும் அவர், “எனவே, ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதை இடதுசாரிகளுக்கு எதிரான போட்டியாகவே பார்க்க வேண்டும். ஆனால், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

ராகுல் காந்தியை தோற்கடிக்க பாடுபடுவோம்.தேர்தலுக்கு பிறகு, அமேதி தொகுதியை தக்க வைத்துக்கொள்வேன் என்று ராகுல் காந்தி ஏற்கனவே கூறியுள்ளார். அப்படியானால், வயநாட்டில் இடதுசாரிகளை தோற்கடிக்க முடியுமா என்று அவர் சோதித்து பார்க்கிறாரா? மக்களுக்கு இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது, காங்கிரஸ்?” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத்தோ, “கேரளாவில், பா.ஜனதாவை எதிர்த்து போராடும் முக்கிய சக்தியாக இடதுசாரி கட்சிகள் திகழ்கின்றன. கேரளாவில், ராகுல் காந்தியை நிறுத்துவதன் மூலம், இடதுசாரிகளுடன் மோத காங்கிரஸ் விரும்புவதாக தெரிகிறது. இந்த மோதலுக்குத்தான் அக்கட்சி முன்னுரிமை கொடுப்பதாக தெரிகிறது. இதன்மூலம், பா.ஜனதாவுடன் மோதும் தேசிய கடமையில் இருந்து காங்கிரஸ் விலகி விட்டது. இருப்பினும், வயநாட்டில் ராகுல் காந்தியை வீழ்த்த இடதுசாரி கூட்டணி பணியாற்றும்,” என்று தெரிவித்தார்.

இத்தகைய பேச்சுகளினால், காங்கிரஸ் தொண்டர்கள் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளிடம் இணைந்து பணியாற்றுவார்களா என்று ஐயம் எழுந்துள்ளது.