எடப்பாடி அதிரடி ஆரம்பம்: 5 அமைச்சர்களுக்கு கல்தா?

மாறப்போவது மத்திய மந்திரிசபை மட்டும் அல்ல, தமிழக கேபினெட்டும் தான் என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள். தேர்தலில் சரியாக வேலை செய்யாத அமைச்சர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள் என்றும், தீயாய் வேலை செய்து ஆட்சியை தக்க வைக்க உதவிய சில எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிகிறது.

தான் பதவியேற்ற நாள் முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சர்களிடம் அன்பு முகம் காட்டி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிரடி முகம் காட்ட தயாராகி வருகிறாராம். ஜெயலலிதா போல் கடுமையாக இல்லையென்றால், அடுத்த தேர்தலில் ஆட்சியும் கட்சியும் காணாமல் போய் விடும் என அவர் அஞ்சுகிறாராம். அதனால் தான் இந்த முடிவாம்.

நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் சரியாக வேலை செய்யாத ஐந்து அமைச்சர்களின் பட்டியல் ரெடியாம். இவர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கல்தா கொடுக்கப்பட்டு, ஐந்து எம்எல்ஏக்கள் மந்திரிகளாக்கப்படுவார்களாம்.

இடைத்தேர்தலின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுக்கால ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார் எடப்பாடி. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பலத்த தோல்வியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகளும் கிடைக்காமல் போனது எடப்பாடியை அப்செட் ஆக்கியுள்ளது. இதை இப்படியே விட்டால் முதலுக்கே மோசம் என்பதால் தான் தவறிழைத்தவர்களுக்கு தண்டனையாம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே மெகா வெற்றியை பெற்றுள்ளது. முதல்வர், துணைமுதல்வர் என இருவரும் தங்களது இரண்டு தொகுதிகளிலும் அதிமுக கவனம் இருந்தது. அதில், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் வென்று டெல்லிவரை கவனம் பெற்றுள்ளார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சேலத்தில் திமுக வேட்பாளர் பார்த்திபன், முதல் சுற்றிலிருந்து முன்னிலை வகித்தார். 26 சுற்றுகளுடன் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி களத்தில் வெற்றி பெற்றார் பார்த்திபன்.

சொந்த ஊரில், ஒரு மாநிலத்தின் முதல்வர் பலம் பொருந்திய கூட்டணி அமைத்தும் கட்சி இப்படி படுதோல்வியை சந்தித்துள்ளது, டெல்லிவரை எதிரொலித்துள்ளதாம். ஆனாலும், 2021ம் ஆண்டு வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லி இருப்பதால் ஈபிஎஸ் சற்றே ஆசுவாசத்தில் இருக்கிறாம்.