பாரதிராஜாவின் பலே வில்லத்தனம்

பாரதிராஜா நல்ல இயக்குனர் மட்டுமல்ல, திறமையான நடிகரும் கூட. அதை ஆயுத எழுத்து, பாண்டிய நாடு மற்றும் குரங்கு பொம்மை போன்ற படங்களில் காட்டிய பாரதிராஜா, வில்லன் கதாபாத்திரத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விளக்கமளித்த இயக்குனர் வெங்கட் பிரபு தலைமையிலான‌ படக்குழு, படத்தில் பாரதிராஜா நடிப்பது உண்மைதான். ஆனால் வில்லன் கேரக்டர் அல்ல என்று கூறியுள்ளது. ஏற்கனவே படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிம்புவுக்கு வில்லனாகக் களமிறங்குகிறார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது நினைவிருக்கலாம்.

எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படங்களை இயக்கி வரும் வெங்கட் பிரபு முதன்முறையாக அரசியல் திரில்லர் கலந்த கதையை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் கல்யாணி பிரியதர்‌ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே எல் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன்.

அப்படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாகவுள்ள படம் மாநாடு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்க இருந்த நிலையில் சில காரணங்களால் ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தியேட்டர் அதிபர்கள் புதிய விகிதாசார முறையை செயல்படுத்தினால், அவர்களின் முடிவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“இந்த விகிதாசார முறை மட்டும் அமலுக்கு வருமானால், ஏற்கனவே மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.

இப்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், நிர்வாகிகளும் இல்லை என்றாலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக எந்த ஒரு முடிவை எடுத்தாலும், அதைப்பற்றி அந்த குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு, அதற்கு பின்னர் அந்த முடிவுகளை பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன்.”