தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றி

தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான  சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
 
2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான சைமா விருது விழா ஹைதாராபாத்தில் நடைபெற்றது. இதில், நடிகை ரிது வர்மா தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது பெற்றுள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்ததற்காக ரிது வர்மாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ரிது வர்மாவுக்கு தமிழுக்கான முதல் விருது இதுவென்றாலும் கூட தெலுங்கில் ஏற்கெனவே இவர் பிரபலம். அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர். பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரியும் கூட.

தெலுங்கு சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்ததோடு தற்போது தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் 2020ல் மக்கள் அபிமானம் பெற்ற திரைப்படங்களில் ஒன்று. துல்கர் சல்மான், ரக்‌ஷன், சிவரஞ்சனி இவர்களுடன் இயக்குநர் கவுதம் மேனன் என நட்சத்திர பட்டாளங்களுடன் பட்டையைக் கிளப்பிய இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்குக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். ரிது வர்மாவின் இயல்பான நடிப்பும் அழுத்தமான அழகும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தது.

Share this:

Exit mobile version