தமிழ்நாட்டில் தென்னக காசி பைரவர் திருக்கோயில் ஆசியாவிலே உலகில் மிகப்பெரிய பைரவர் ஆலயம்!
உலகிலேயே மிகப்பெரிய பைரவர் ஆலயம் ஒன்று உருவாகி வருகிறது.64 பைரவர்களுக்கும் அந்த ஒரே ஆலயத்தில்சிலைகள் வைக்கப்படுகின்றன.
இந்தப் பைரவர் ஆலயம்
ஈரோடு மாவட்டம் காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிப் பாளையத்தில் கட்டப்பட்டு உருவாகி வருகிறது.
இதன் நுழைவாயிலில் ராஜகோபுரம் இருப்பது போல் உலகின் மிகவும் பிரம்மாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை உருவாகியுள்ளது.
அவர் வழியாகத்தான் ஆலயத்தில் உள்ளே செல்ல வேண்டும்.
சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார் என்பது நம்பிக்கை. பைரவரின் வாகனம் நாய்.காலபைரவரின் பின்னால் பிரம்மாண்டமான நாய் உருவம் உள்ளது.
இந்த உலகின் மிகப்பெரிய காலபைரவர் சிலையை பலரது கூட்டு முயற்சியில் உருவாக்கி வரும் விஜய் ஸ்ரீ சுவாமிகள் கூறும் போது,
”எனக்குச் சிறுவயதிலிருந்து நாய்கள் பிடிக்கும் .பைரவரின் வாகனமாக இருப்பதுதான் நாய்.எங்கள் வீட்டில் இருபது நாய்களுக்கு மேல் இருந்தன. அந்த அளவிற்குச் சிறு வயதிலேயே எனக்குள் பைரவர் நிறைந்துவிட்டார் . ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் விழுந்த விதை தான் இன்று பைரவருக்கான இந்தப் பிரம்மாண்ட ஆலயமாக எழுந்து நிற்கிறது.எனக்குள் கனிந்து கொண்டிருந்த கனவு இப்போது நனவாகி இருக்கிறது. பலரது அன்பாலும் கூட்டு முயற்சியாலும் ஒத்துழைப்பாலும் உதவிகளாலும்தான் இது நிறைவேறிக் கொண்டிருக்கிறது –
சின்ன விதையாக விழுந்தது ஆலயமாக உருவாகி இப்போது நிறைவடையும் நிலையில் இருக்கிறது. எல்லாம் கால பைரவர் அழைத்துச் சென்று வழிகாட்டியதுதான்.அவர் காட்டிய வழியில் நான் சென்றதால் தான் இது சாத்தியமாகி உள்ளது. அதன்படியே ,இந்தப் பைரவர் ஆலயத்தின் திருப்பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இங்குள்ள 39 அடி காலபைரவர் சிலைபோல உலகின் வேறெங்கும் அமைக்கப்படவில்லை. எனவே தான் அது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக்கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,
பொதுவாக சிவாலயங்களில் தெற்குப் புறமாக சிறிதாக இரண்டு அடி உயரத்தில் ஒரு கால பைரவர் சிலை இருக்கும். ஆனால் பைரவருக்கு முதன்மையாக இவ்வளவு பெரிய ஆலயமும் மிகப்பெரிய சிலையும் உருவாகி உள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக்கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,
இந்தக் கோயிலின் திருக்குடமுழுக்கு என்கிற மகாகும்பாபிஷேக விழா வரும் 2023 மார்ச் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.முறையான வேள்விகள்,நான்குகால பூஜைகளுக்குப் பிறகு இது நடைபெற உள்ளது.
இந்தக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.மக்கள் அனைவரும் பாரம்பரியத்தை நோக்கித் திரும்பிப் பார்க்கிற காலகட்டமாக இப்போதைய காலம் மாறி உள்ளது.
நமது பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்வுகளை பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவல்பூந்துறை கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகால பழமையான சிவன் கோவிலில் இருந்து ஆயிரம் பேர் குடமுழுக்குக்கான தீர்த்தத்தைக் கொண்டு வருகிறார்கள்.
அது மட்டுமல்ல ஒரு கும்மித் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து கொள்ள உள்ளார்கள்.திங்கள் கிழமை காலை 10:15 மணிக்கு நடைபெறும் குடமுழுக்குக்கு முன்பு வெள்ளி, சனி, ஞாயிறு என்று, மூன்று நாட்களிலும் பல்வேறு நிகழ்வுகள் உண்டு.நான்கு கால பூஜைகள் உண்டு.அன்னதானமும் உண்டு.இவையெல்லாம் இந்தக் கோவிலின் மீதும் ஆன்மீகத்தின் மீதும் மக்களுக்குக் கவன ஈர்ப்பு செய்யும் அம்சங்களாகும்.
இந்தக் கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கே 650 கிலோ எடையுள்ள ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிலை ஒன்று உள்ளது. இது முழுக்க ஐம்பொன்னால் ஆனது. அதை வணங்குபவர்களுக்குப் பலன்களும் வளங்களும் கிடைத்து வருகின்றன.குடமுழுக்கின்போது மக்கள் அனைவரும் இதற்கு நெய் அபிஷேகம் செய்யலாம்.
இந்த ஆலயத்தில் ஜாதி மத பேதம் இல்லாமல் அனைவரும் வந்து அருள் பெற்றுச் செல்லலாம்.திருக்குடமுழுக்குக்
எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை.அந்த வகையில் பொது மக்களின் ஆலயமாக சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக் கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.
பைரவர்கள் 64 பேருக்கும் சிலைகளை அமைத்து வருகிறோம்.ஒரு சிலைக்கு 76,000 ஆகிறது இதுவரை 28 சிலைகளுக்குச் செலவுகளை ஏற்று உள்ளார்கள். மீதி செலவுகளை வசதி உள்ளவர்கள் ஏற்றுக் கொடுத்து இந்தத் திருப்பணிக்கு உதவிடலாம். அதன்மூலம் இந்தப் பைரவர் ஆலயப் பணியில் பங்கு பெறலாம்.
ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை அமைத்து ஏற்கெனவே நாங்கள் பல உதவிகளைச் செய்து வருகிறோம். அவற்றில் முக்கியமானது ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குதல், ஆலயப் பணிகள், யோகா கற்றுத் தருதல், புற்றுநோய் போன்ற நோயாளிகளுக்குச் சிகிச்சைக்கு உதவுதல் போன்றவற்றைச் செய்து வருகிறோம். இப்பணிகளில எங்களுக்கு 12 டாக்டர்கள் உதவி வருகிறார்கள்.
இந்த ஆலயத்தின் திருப்பணி என்பது ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது. எனவே உதவி கரங்கள் நீட்ட விரும்புபவர்கள் பைரவரின் ஆலயப் பணி என்கிற ஆன்மீகப் பணியில் பங்கு பெற்று பைரவர் அருளைப் பெற்றுக் கொள்ளலாம்”இவ்வாறு அவர் கூறினார்.