ஆஹா தமிழில் ஜீவியின் செல்ஃபியை தொடர்ந்து ஐங்கரன் வெளியாகிறது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில்
ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி, தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
அதனைத்தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உங்களின் இந்த உற்சாகத்தை பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. நான் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். பள்ளி நாட்களில் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்  கிரிக்கெட்டராக முயற்சி செய்திருப்பேன். இசை, நடிப்பு இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது எனக்கு கடினமாக தோன்றவில்லை.
உங்களின் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாக செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காக காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள் என்றார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் ஜி வி பிரகாஷ்  குமாரிடம் பாடல்களை பாடச் சொல்லி கேட்டனர். அவரும் பேச்சுலர், மதராசபட்டினம், ஆடுகளம் போன்ற படங்களிலிருந்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தார். அப்போது மாணவர்கள் விசில் அடித்தும், உரக்கக்கத்தியும், கைத்தட்டியும், தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர்கூறியதாவது:-
முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். செல்பி படத்தில் ஒரு டயலாக் இருக்கும் இஞ்சினியரிங் என்று சொன்னாலே காரி துப்புரான் என்று எழுதியிருப்பேன்.
 இது பொதுவாக சொல்லப்பட்டது கிடையாது இன்ஜினீயரிங்கை தவறாக பயன்படுத்தும் சிலருக்காக சொல்லப்பட்டது. எனக்கும் இன்ஜினியரிங் மிகவும் பிடிக்கும். நானும் இன்ஜினியரிங் படித்தவன்.
எனது நண்பன் ஒருவன்  இஞ்ஜினியரிங் படிக்கும் போது கார் வாங்கினார். சில பிரச்சினைகளால் அந்த காரை விற்றான். அவரிடம் எப்படி கார் வாங்கினான் என்பது குறித்து கேட்டபோது, இதே கல்லூரியில் அட்மிஷன் போடும் புரோக்கராக வேலை பார்த்ததாக கூறினான் . அதை கதை கருவாக எடுத்துக் கொண்டு மற்ற விஷயங்களை சேர்த்து படமாக எடுத்தேன். கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்றவுடன் என் நினைவுக்கு வந்தது ஜிவி சார். அதனாலேயே அவர் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.கல்லூரி சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த கல்லூரி கலை விழாவில் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி. அடுத்ததாக ஜிவி சார் நடிக்கும் ஐங்கரன் படமும் கல்லூரி சம்பந்தப்பட்ட படம் தான். அந்த படத்தின் டிரைலரும் இங்கு திரையிட்டது பொருத்தமான ஒன்று. மாணவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார்.
இவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐங்கரன் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-ஜிவி பிரகாஷ்குமார் சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒரு கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர் என்றால் அது ஜிவி பிரகாஷ் குமார் தான். ஒரு அறிவு சார்ந்த படத்தை எடுத்துள்ளோம். அதற்கு மாணவர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. வரும் மே மாதம் 5ஆம் தேதி படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
 அதன் பிறகு மே மாத இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஐங்கரன் வெளியாக உள்ளது என்றார்.
இறுதியாக கல்லூரி விழா குழு சார்பில் மூவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

Share this:

Exit mobile version