ஏ.வி.எம். கன்வென்ஷன் சென்டர்

வணக்கம்,

இந்தியத் திரைப்படத் துறையில் 80 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தையும் பெருமையையும் தாங்கி நிற்கும் நிறுவனம் ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ்.

இதுவரை 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு இணையத் தொடரை தயாரித்துள்ள எங்கள் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் பல முன்னோடி சாதனைகளையும் தொழில்நுட்பப் புதுமைகளையும் நிகழ்த்திய நிறுவனமாக ஏ.வி.எம். விளங்குகிறது.

1938-ஆம் ஆண்டு வெளியான நந்தகுமார் திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகர் (Playback Singing) முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது; 1944-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மொழிமாற்றுத் திரைப்படமான ஹரிச்சந்திராவை தயாரித்தது; 1945-ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் Lip Synchronisation தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது; 1947-ஆம் ஆண்டு நாம் இருவர் திரைப்படத்தில் மகாகவி பாரதியாரின் பாடல்களை உரிமையுடன் பயன்படுத்திய முதல் நிறுவனம் ஆனது. பின்னர், அரசின் வேண்டுகோளை ஏற்று, பாரதியார் பாடல்களின் உரிமையை அரசுக்கே நன்கொடையாக வழங்கிய பெருமையும் ஏ.வி.எம்.-க்கு உண்டு.

அதனைத் தொடர்ந்து, பாடல்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அந்த நாள் (1954), குழந்தைகளுக்கான திரைப்படத்திற்காக ஜவஹர்லால் நேரு தேசிய தங்கப் பதக்கம் பெற்ற ஹம் பஞ்சி ஏக் டால் கே (1957), எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்த மெல்லத் திறந்தது கதவு (1986), ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்ற முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட சம்சாரம் அது மின்சாரம் (1986), நடிகர்களையும் அனிமேஷனையும் ஒருங்கிணைத்த இந்தியாவின் முதல் திரைப்படமான ராஜா சின்ன ரோஜா (1989), பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு முன்னோடியாக அமைந்த சிவாஜி (2007), இந்தியாவில் முதன்முதலாக Dolby Atmos தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சிவாஜி 3D (2012) உள்ளிட்ட பல மைல்கற்களை எங்கள் நிறுவனம் படைத்துள்ளது.

மேலும், இந்தியாவின் ஆறு முதலமைச்சர்கள் எங்கள் திரைப்படங்களில் பணியாற்றிய பெருமையும் எங்களுக்கு உண்டு. அறிஞர் அண்ணா (ஓர் இரவு – 1951), கலைஞர் மு. கருணாநிதி (பராசக்தி – 1952), டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் (அன்பே வா – 1966), டாக்டர் என்.டி. ராமாராவ் (1954–1970 காலகட்டத்தில் ஐந்து திரைப்படங்கள்), டாக்டர் செல்வி ஜெ. ஜெயலலிதா (1962–1970 காலகட்டத்தில் நான்கு திரைப்படங்கள்) மற்றும் திரு. சி. ஜோசப் விஜய் (வேட்டைக்காரன் – 2009) ஆகியோர் எங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்தச் சிறப்புமிக்க திரைப்பட வரலாற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 2023-ஆம் ஆண்டு “ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியம்” தொடங்கப்பட்டது. இதில் அரிய ஆவணங்கள், பழமையான திரைப்பட உபகரணங்கள், படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய கார்கள், அரிய இயந்திரங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தியத் திரைப்பட வளர்ச்சிப் பயணத்தை நேரடியாக உணர்த்தும் அனுபவத்தை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது “ஏ.வி.எம். கன்வென்ஷன் சென்டர்” என்ற நவீன அரங்கை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் வகையில் விசாலமான அரங்கம், பிரம்மாண்டமான மேடை அமைப்பு, போதுமான கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சிகள், நிறுவன மாநாடுகள், விருது வழங்கும் விழாக்கள், இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், திருமண நிச்சயதார்த்தம், திருமணம், திருமண வரவேற்பு உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற சிறந்த இடமாக இவ்வரங்கம் திகழ்கிறது.

மேலும், பிற அரங்குகளில் அரிதாகக் காணப்படும் வகையில், சைவ மற்றும் அசைவ உணவு தயாரிப்பிற்கென தனித்தனி, முழுமையான சமையலறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அனைத்து தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பான சேவையை வழங்க முடிகிறது.

இதன் விரிவான தகவல் அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளோம். தங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்புடன் எதிர்நோக்குகிறோம்.

நன்றி.

Exit mobile version