‘ஆகஸ்ட் 16,1947 படத்தின் இசைவெளியீட்டு விழா!
படத்தொகுப்பாளர் சுதர்ஷன் பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்க்க வாய்ப்பு கொடுத்த முருகதாஸ் சாருக்கும் தயாரிப்பாளர் பொன்குமார் சாருக்கும் நன்றி. இந்தப் படம் நன்றாக வர உழைத்திருக்கும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்”.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “இந்தப் படத்தில் நான் இருக்க காரணமாக இருந்த முருகதாஸ் சாருக்கு நன்றி. இயக்குநர் பொன்குமார் இந்தப் படத்தின் கதை கூறும்போதே, கதையும் கதாபாத்திரமும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. பீரியட் ட்ராமாவாக ஒரு படம் உருவாக்குவது கஷ்டம். அதை படக்குழு சிறப்பாக செய்துள்ளது. வாழ்த்துகள்!”.
நடிகை ரேவதி பேசியதாவது, “இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்தது பொன்குமார் சார்தான். என்னுடைய புகைப்படத்தை நண்பர் ஒருவர் வாயிலாக பார்த்து முருகதாஸ் சார் பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு கூப்பிட்டு இருந்தார். நானாகத் தேடிப்போனது கிடையாது. இந்த வாய்ப்பு என்னை தேடி வந்த ஆசீர்வாதம். ஜிகே சார், பொன்குமார் சார், முருகதாஸ் சார் என இவர்கள் எல்லோருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். என் குடும்பத்திற்கு நன்றி”.
நடிகர் புகழ் பேசியதாவது, “இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் நம்பி கொடுத்த முருகதாஸ் சாருக்கும் பொன்குமார் சாருக்கும் நன்றி. இதற்கு முன்பு சில படங்கள் நான் நடித்திருந்தாலும், இது எனக்கு முக்கியமான படம். படத்தில் பார்த்து பார்த்து நடித்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவருமே முழு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கெளதம் கார்த்திக் எனக்கு பல விஷயங்களில் நடிப்பில் உதவி செய்தார். இயக்குநர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்று பார்த்திருக்கிறோம். ஆனால், பொன்குமார் இந்தப் படம் முழுக்க வெறித்தனமாக உழைத்திருக்கிறார். யாரிடமும் முகம் சுழிக்காமல் வேலை வாங்கி இருக்கிறார். இந்த நல்ல படத்தில் நான் வேலை செய்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி”.
இயக்குநர் பொன்குமார், “இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிட்டதில் இருந்து, இப்போது சிறப்பு விருந்தினராக வந்து படத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. இன்று விழா நாயகன் ஷான் ரோல்டன் இந்தப் படத்தின் இசையில் ஆரம்பம் முதலே ஈடுபாடு காட்டினார். புது இசைக்கருவிகளில் பழைய இசையை எடுத்து வந்தார். பாடலாசிரியர் மோகன்ராஜா, பாரதி மேம் சிறப்பான வரிகளோடு புது வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடலைக் கொடுத்துள்ளனர். தினேஷ் மாஸ்டர், லீலா மாஸ்டர், கேமரா மேன் செல்வகுமார் என அனைவருக்கும் நன்றி. ’தர்பார்’, சர்கார்’ ஆகிய படங்களின் ஆர்ட் டிரைக்டர் சந்தானம் சார் இன்று நம்முடன் இல்லை. கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளார். சத்யமங்கலம், வேலூர் எனப் பல இடங்களிலும் நாங்கள் இந்தப் படத்திற்கான லொகேஷன் பார்த்துக் கொடுத்துள்ளோம். என் உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. படத்தில் கெளதம் கார்த்திக் சார் வேற லெவலில் உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தின் முக்கியமான தருணங்களில் எல்லாம் மிகச் சிறப்பான நடிப்பை தந்துள்ளார். வித்தியாசமான கெளதம் கார்த்திக்கை நாம் பார்க்கலாம். ரேவதி இந்தப் படத்தில் வழக்கமான கதாநாயகி கிடையாது. சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தாலே இயக்குநர் ஆகிவிடலாம். உழைத்துக் கொண்டே இருப்பார். நாம் எழுதுகிற எழுத்துக்கு ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். அவருக்கு எப்போதும் நன்றி. படம் பார்த்து ஆதரவு கொடுங்கள்”.
நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, “இயக்குநர் பொன்குமார் சொன்னதுபோல, இந்தப் படம் எங்கள் எல்லாருக்குமே முக்கியமானது. சிவகார்த்திகேயன் சார் இன்று வந்ததுக்கு நன்றி. இந்தப் படம் நான் ஒத்துக் கொள்ள முக்கிய காரணம் முருகதாஸ் சார்தான். ஒருக்கட்டத்தில் இந்தப் படம் என் கைவிட்டுப் போனது. அப்போது முருகதாஸ் சார், ‘என்னை நம்பி வாங்க’ என்று கூப்பிட்டார். அவருக்காக மீண்டும் இந்தப் பட வாய்ப்பு எனக்கு வந்தது. வேலூரில் படமாக்கினோம். அங்குள்ள மக்கள் எங்கள் படக்குழுவை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச்சிறப்பான உழைப்பைக் கொடுத்துள்ளனர். தினேஷ் மாஸ்டர், லீலா மாஸ்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இன்று விழா நாயகனான ஷான் ரோல்டன் சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். ரொம்ப ஸ்மார்ட்டான இசையமைப்பாளர். இந்தப் படத்தின் மூலம் புகழுக்கும் எனக்கு நல்ல நட்பு உருவாகியுள்ளது. ரேவதி அறிமுக நடிகை என்று தெரியாத அளவுக்கு நன்றாக நடித்துள்ளார். ரசிகர்கள் அனைவரையும் திருப்திப் படுத்த வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் குடும்பமாக வேலைப் பார்த்துள்ளோம்”.
இயக்குநர் ராஜ்குமார் பேசியதாவது, “’துப்பாக்கி’ படத்தில் நான் உதவி இயக்குநராக இருந்தபோது, பொன்குமார் அங்கு ஆஃபிஸ் ஸ்டாஃப். அங்கிருந்து இப்போது இயக்குநராக வந்துள்ளார். அதற்கு முருகதாஸ் சாரின் மனதும் ஒரு காரணம். அவருடைய தயாரிப்பில் பொன்குமார் படம் இயக்கி இருப்பதற்கு வாழ்த்துகள். இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எனக்கு உள்ளது. கெளதம் அதிக திறமை கொண்டார். சீக்கிரம் முக்கியமான கதாநாயகனாக வருவார். முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தால் நிச்சயம் இயக்குநராக வரலாம். அவரே நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டுவார். அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ’ஜெய்பீம்’ படத்தில் சிறப்பான பின்னணி இசையைக் கொடுத்திருப்பார் ஷான். இதிலும் சந்தேகமில்லாமல் சிறப்பான இசையைதான் ஷான் கொடுப்பார். அனைவருக்கும் வாழ்த்துகள்”.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “முதலில் நான் படம் பற்றி சொல்லி விடுகிறேன். இந்திய விடுதலை எனும்போது தனி மனிதர் ஒவ்வொருவருக்குமே சொல்ல முடியாத வலி இருக்கும். அப்படி இருக்கும்போது அடிமைப் பட்டு கிடந்த ஒரு நாடு எனும்போது அந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை பொன்குமார் கடின உழைப்பைக் கொடுத்து படமாக்கி இருக்கிறார். முதல் படமே பீரியட் படம் எனும்போது அதில் உங்கள் நம்பிக்கையும் தெரிகிறது. சவாலை சந்திக்கத் தயாரானவன் தான் சாதனையும் செய்வான் என்று சொல்வார்கள். பொன்குமார் அதற்கு தகுதியானவர். படத்தை பார்க்க வேண்டும் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள். ஷான் ரோல்டன் இசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ரேவதிக்கும் வாழ்த்துகள். புகழ் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது ட்ரைய்லரில் தெரிந்தது. கெளதம் கார்த்திக்கை முதலில் லண்டனில்தான் சந்தித்தேன். எனக்கும் கார்த்திக் சாரை பிடிக்கும். யாருடைய சாயலும் இல்லாமல் அவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும். திருமணத்திற்கு கெளதம் என்னை கூப்பிட்டு இருந்தார். அவருடைய திருமணத்தில் அனைத்து வேலைகளையும் அவரே எடுத்து செய்திருந்தது சிறப்பான விஷயம்.
நல்ல குணம் என்பதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும். அப்படியான ஒருவர்தான் கெளதம். அடுத்தடுத்தப் படங்கள் வர இருக்கிறது. வாழ்த்துகள். திருமணத்திற்கு பிறகு பலரின் வாழ்க்கையும் நல்ல விதமாக மாறும். எனக்கும் அப்படி நல்ல விஷயங்கள் நடந்தது. என்னைப் போலவே உங்களுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று இங்கு நான் வர முக்கிய காரணம் முருகதாஸ் சார்தான். அவருடைய படங்களுக்கு பெரிய ரசிகன் நான். அவர் தயாரிப்பில் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு முன்பு அவர் படங்களை தொகுத்து வழங்குவது, நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதித் தருவது போன்ற விஷயங்களை செய்திருக்கிறேன். அடுத்து முக்கியமான ஒரு கட்டம் இருக்கிறது. அது சீக்கிரம் நடக்கும். உதவி இயக்குநர்களுக்கு முருகதாஸ் சார் சிறப்பான ஆதரவு கொடுப்பார். கூட இருப்பவர்களை நாம் பார்த்துக் கொண்டால், நம்மை மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என ‘வீரம்’ படத்தில் அஜித் சார் சொல்வதுபோல தான் முருகதாஸ் சாரும். உங்கள் தயாரிப்பில் நிறைய நல்ல கதைகள் பார்க்க இருக்கிறோம் என்பது மகிழ்ச்சி. படத்திற்கு வாழ்த்துகள்”.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், “எனக்கு இவ்வளவு நாட்கள் கொடுத்த அன்பையும் ஆதரவையும் இந்தப் படத்திற்கும் கொடுங்கள். சிவா இன்று வந்ததால், நிகழ்ச்சி மேலும் மெருகேறியுள்ளது. இந்தப் படத்தின் கதையை என் உதவி இயக்குநர் பாலாஜி படித்துவிட்டு என்னை படிக்க சொல்லி கொடுத்தார். பின்பு நான் படமாக்க முடிவு செய்தேன். கெளதம் கார்த்திக் அற்புதமான உழைப்பைக் கொடுத்துள்ளார். கார்த்திக் சாரை நினைக்காமல் ஒரு ரொமான்ஸ் காட்சியை உருவாக்க முடியாது. ‘துப்பாக்கி’ படத்தில் ஜெயராம் சார் வரும் ஒரு காட்சிக் கூட கார்த்திக் சாரை மனதில் வைத்துதான் உருவாக்கினேன். கெளதம் சாருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ரேவதி நன்றாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு நிறைய நடிப்பதற்கு வாய்ப்பு வரும். படம் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி என பான் இந்தியாவாக வருகிறது. அதனால், இன்றைய காலக்கட்டத்தில் புரோமோஷனுக்கு அனைவரும் வர வேண்டும். மனிதனால் கொடுக்க முடியாத விஷயத்தைத்தான் கடவுள் கொடுப்பார். அதனால், நம்மால் கொடுக்க முடிந்ததை நாம் கொடுக்க வேண்டும். எனக்கு அப்படி பல பேர் உதவி செய்திருக்கிறார்கள். அதனால், நானும் பலருக்கு உதவி செய்கிறேன். இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். நன்றாக வந்திருக்கிறது. சந்தானம் சார் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. விழா நாயகன் ஷான் ரோல்டன் சிறப்பான இசையக் கொடுத்துள்ளார். மூன்று பாடல்களும் அழகாக வந்துள்ளது. படம் வெற்றிப்பெற படக்குழுவினருக்கு வாழ்த்துகள்”.