பொள்ளாச்சியின் இன்னொரு பாலியல் பகீர், கொங்கு நாட்டு மர்மங்கள்

விவசாயத்துக்கும், தொழில்களுக்கும், பசுமைக்கும், ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற கொங்கு நாடு, சமீப காலமாக தவறான விஷயங்களுக்காக செய்திகளில் அடிபடுகிறது. பல பெண்களை சீரழித்து அதை விடீயோ எடுத்த வக்கிர‌ கும்பல் கைதான‌ சில வாரங்களுக்குள், இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அந்த பகுதியில் நடந்தேறி உள்ளது.

கோவையில் மாயமான கல்லூரி மாணவி பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ள நிலையில், அவரை கொன்றது அவரது அத்தை மகனே என்று கூறப்படுகிறது. இவருக்கு கல்யாண‌ம் ஆகி ஒரு குழந்தையும் இருக்குதாம். ஆனாலும் இப்பெண் மீது உள்ள ஆசை தீரவில்லையாம்.

மாணவிக்குத் திருமணம் நடக்க இருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை நடந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கின்றனர். ஆனால் இந்த கொலை ஒருவரால் மட்டுமே செய்திருக்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்டோர் சம்பந்தப் பட்டிருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் கூறுகையில், மாணவி கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் துப்பு கிடைத்துள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார்.

அந்த பெண்ணின் குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. மாணவி பிரகதியின் அண்ணன் சோகத்தில் இருந்து மீளாத நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்: “எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வர பஸ் ஏற நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

3.30 மணிக்கு பிரகதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுதுரை தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்லடம் வந்து கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர் பிரகதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியடைந்த நாங்கள் பல்லடம் போலீசில் புகார் செய்ய சென்றோம். பல்லடம் போலீசார் நீங்கள் கோவை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.

உடனே கோவைக்கு புறப்பட்டோம். கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தோம். இந்நிலையில் எனது தங்கை மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கோவை, பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வருவது அதிக கவலை அளிக்கிறது.

கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.”