அதிமுகவுக்கு தாவிய அம‌முக பிரமுகர்: டிடிவி, திரையுலகம் அதிர்ச்சி

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

இது டிடிவி தினகரன் வட்டாரத்தில் மட்டுமில்லாமல், திரையுலகத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், பட தயாரிப்பாளராக இருக்கும் ராயப்பன், சில தினங்களுக்கு முன் வரை டிடிவியின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தவர்.

நீண்ட நாட்களாக ரிலிஸ் ஆகாமல் இருந்த அவரின் கீ படத்துக்கு கூட தினகரன் உதவியதாக கேள்வி. அப்படி அமமுகவில் கோலோச்சிய அவரா கட்சி மாறினார் என பலர் வியப்படைந்துள்ள வேளையில், ‘இது வெறும் ஆரம்பம் தான், டிடிவியின் ஒட்டு மொத்த கூடாரமும் விரைவில் காலியாகும்,’ என விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெல்லை மக்களவை தொகுதியில் முதலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் ஞான அருள்மணி. பின் இவருக்கு பதில் மைக்கேல் ராயப்பன் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். நேற்று அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 அமமுக நிர்வாகிகள், முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் தினகரன் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் தோல்விக்கு பின் அமமுக, நிர்வாகிகள் பலர், அங்கிருந்து விலகி, தாய் கட்சியான, அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். நெல்லை புறநகர் மாவட்ட அமமுக செயலர் பாப்புலர் முத்தையா தலைமையில், நெல்லை மைக்கேல் ராயப்பன், மாநில, எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலர் சின்னதுரை உட்பட முக்கிய நிர்வாகிகள், 15 பேர், முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தவிர, தென்சென்னை லோக்சபா தொகுதியில், அமமுக சார்பில் போட்டியிட்ட, நெல்லையைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தன் ஆதரவாளர்களுடன், குற்றாலத்தில் உள்ள தன் ரிசார்ட்டில் விடிய, விடிய ஆலோசனை நடத்தி உள்ளார். இவரும், விரைவில், அதிமுகவில் இணையலாம் என கூறப்படுகிறது.

அமமுக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆர் பாலசுப்பிரமணியன், ராஜாராம், ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, நகர செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் ஆர்.விஜய், அசோக், சூரியபிரகாஷ் ஆகியோரும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்துள்ளனர். இதை எப்படி டீல் செய்யலாம் என தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்.