Alliance Angry Stalin, cool DMDK

சத்தம் போட்ட ஸ்டாலின், ஸ்மைலி அனுப்பிய சுதீஷ்: கூட்டணி பரிதாபங்கள்

‘இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அவங்க இழுத்தடிப்பாங்க. இதுக்கு மேலயும் காத்திருக்க முடியாது. இவங்களால மத்த கட்சிகளோட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடியாம இருக்கு’னு திமுக தலைவர் மு க ஸ்டாலின், கூட்டணி விஷயத்துல‌ தேமுதிக போக்குக் காட்டறதைப் பத்தி தனக்கு நெருக்கமான வட்டாரங்களில சத்தமாவே பேசி இருக்கார்.

ஆனால், விஜயகாந்த் கட்சியோ இந்த நிமிஷம் வரைக்கும் எதுக்கும் அசராம, இரண்டு பெரிய கட்சிகளான‌ திமுக, அதிமுகவோட கூட்டணி கண்ணாமூச்சி பேச்சுவார்த்தையை கன்னித்தீவு கணக்கா தொடர்ந்துட்டு இருக்கு. ஒரு முக்கிய பிரமுகர் இதைப் பத்தி கேப்டனின் மைத்துனரும், கூட்டணி டீலிங் பேசுபவருமான சுதீஷ் கிட்ட கேட்டப்போ, ஸ்மைலி மட்டுமே பதிலா வந்து விழுந்ததாம்.

இதுக்கிடையே, “சமீபகாலமாக விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேடையிலும் அவர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பேசி வருகிறார். அவர் தான் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பார். அது தான் கேப்டனின் முடிவாவும் இருக்கும்’னு சில தேமுதிக பிரமுகர்கள் சொல்றாங்க.

விஜயகாந்தை இழுக்க அதிமுகவும், திமுகவும் தீவிர முயற்சிகள் எடுத்து வந்தாலும், தேமுதிக எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யாமல் காலம் கடத்துவதால் அவர்களது முடிவுக்காக பிற கட்சிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கட்சி பிரமுகர்களிடம் சுதீஷ் பேசும் போது, திமுக கூட்டணியில் இருந்து ஸ்டாலினும் அதிமுக கூட்டணியில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசி வருகிறார்கள். எனவே மற்றவர்கள் நம் கட்சியை பற்றி பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்னு சொல்லி இருக்கார்.

அமைச்சர் ஜெயகுமாரோ, “தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை. நல்லதே நடக்கும். இந்த கூட்டணி அமையக்கூடாது என எதிரிகள் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் பலிக்காது”னு நிருபர்களிட கூறி இருக்கார்.

மேலும் அவர், “பாமகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே சிண்டு முடியும் வேலைகளை சிலர் செய்கின்றனர். இரு கட்சிகளுக்கும் இடையே திரித்து கோபம் வரும் அளவுக்கு சிலர் கருத்து சொன்னாலும் நாங்கள் ஒருமித்த கருத்தோடு தேர்தலை சந்திப்போம். கட்சிகளுக்குள் கொள்கைகள் மாறுபடலாம். இது தேர்தல் கூட்டணி. திமுக-காங்கிரசை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி”னு சொல்லி இருக்கார்.